கல்முனை: இழுபறியில் இருந்த கல்முனை மாநகர மேயர் பதவியிலிருந்து கல்முனை மாநாகர மேயர் சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் தனது இராஜினாமா கடிதத்தை தன்னிடம் கையளித்துள்ளதாகவும் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும் கல்முனை மாநகர மேயர் பிரச்சினை குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (08) மாலை 3 மணியளவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
தேர்தல் ஆணையாளாருக்கு புதிய மேயர் பற்றி அறிவிப்போம். தேர்தல் ஆணையாளரின் கெசட் பண்னியதும் சிரேஸ்ட சட்டத்தரணியும் கட்சியின் பிரதி செயலாளருமான நிசாம் காரியப்பர் மேயராக செயல்படுவார் என தெரிவித்தார்.
இதேவேளை இராஜினாமா செய்த மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் இது விடயமாக கருத்து வெளியிடுகையில்,
நான் இந்த விடயத்தில் தவறாக வழிநடத்தப்பட்டேன். ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போன்று நான் முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்யமாட்டேன் என்று கூறவில்லை. ஆனால் அதற்கான அவகாசத்தையே தலைவரிடம் வேண்டினேன். ஆனால் தற்போது எமது கட்சியின் நலன், மக்களின் எதிர்கால நலன் என்பவற்றைக்கருத்தில் கொண்டே நான் இந்த முடிவினை எடுத்திருக்கின்றேன். நான் கட்சியையும், கட்சியின் தலைவரையும் நன்கு மதிப்பவன் என்னை கட்சியிலிருந்து தூரப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். நான் இந்தக் கட்சிக்குள்ளே இருந்து போராடுவேன் என தெரிவித்தார்.
அது மட்டுமன்றி பிரதி மேயர் பதவி சிராஸ் மீராசாஹிபுக்கு வழங்கப்படுமா என ஊடகவியாளர்கள் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் கேட்டதற்கு அது சம்பந்தமாக எமது கட்சி கூடித் தீர்மாணம் எடுத்தபின்பே யாரை பிரதி மேயர் நியமிப்பது என தெரிவிப்போம் எனக் கூறினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸனலி, இராஜினாமா செய்த மேயர் சிராஸ் மீராசாஹிப், புதிய மேயரும் கட்சியின் பிரதிச் செயலாருமான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் இறுதியில் இராஜினாமா செய்த மேயர் சிராஸ் மீராசாஹிப் புதிய மேயரும் கட்சியின் பிரதிச் செயலாருமான சட்டத்தரணி நிசாம் காரியப்பர்; ஆகிய இருவரும் கைலாகு கொடுத்து உரையாடியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment