காத்தான்குடி: சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள மீராபாலிகா தேசிய பாடசாலையில் நேற்று 07-வியாழக்கிழமை நடைபெற்றது.
‘சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக கல்வி’ எனும் தொனிப்பொருளில் கொழும்பு இனாவீல் கழகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, கல்வியமைச்சு மற்றும் காத்தான்குடிப் பொலிஸாரின் அனுசரணையுடன் குறித்த செயலமர்வு இடம்பெற்றது.
இச் செயலமர்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன ,கொழும்பு இனாவீல் கழகத்தின் இணைப்பாளர் ஜேசி முலேல், அதன் முன்னாள் தலைவர் மிரமாலி சம்மிக மற்றும் அதன் முக்கியஸ்தர் சவர்ன சொய்சா, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து எம்மை நாம் எவ்வாறு காத்துக் கொள்வது,நீங்கள் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு ஈடுபடுத்தப்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள்,ஈடுபடுத்தப்பட்டால் அல்லது அதற்கான அறிகுறி விளங்கினால் அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யக் கூடிய 1929 எனும் தொலைபேசி எண் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவுரைகள் இடம்பெற்றன.
கொழும்பு இனாவீல் கழகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, கல்வியமைச்சு மற்றும் பொலிஸாரின் அனுசரணையுடன் பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாகவே மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இந்தச் செயலமர்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் பல நிறுவனங்களினாலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment