ரியாத்: ஹெரோயின் கடத்தி வந்தக் குற்றத்திற்காக பாகிஸ்தான் நபர் ஒருவருக்கு சவூதியில் தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கற்பழிப்பு, கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்றவை கடும் குற்றங்களாக கருதப்பட்டு, இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹெரோயின் எனப்படும் போதைப்பொருளை சவுதி அரேபியாவுக்கு கடத்தி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தானியர் ஜாபர் குலாம் அலி கான் என்பவருக்கு நேற்று தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஜாபரின் மரண தண்டனையோடு சேர்த்து இந்தாண்டில் இதுவரை 71 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும், 76 குற்றவாளிகளின் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment