தன் கனவு நனவாகும் சில மணித்தியாலங்களுக்குள் கொல்லப்பட்ட இலங்கை மாணவன்! இங்கிலாந்தில் பரிதாப சம்பவம்!!

Thavisha Lakindu Peiris, who was killed while making his last pizza delivery in Sheffield– MJ

செப்ஃபீல்ட்: பல பெற்றோர்களுக்கு இருக்கும் கனவுகள் போல்தான் தன் பிள்ளையை படித்து ஆளாக்க வேண்டும் எனும் அவாவுக்கமைய இலங்கையில் படிக்கவைத்து, பின்னர் இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் ஓர் பட்டத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் நோக்கத்துடன் தனது மகனை அனுப்பிவைத்த பெற்றோர், தனது பிள்ளையின் சடலத்தைக் காண்பதற்கு தற்பொழுது இங்கிலாந்து, செப்ஃபீல்ட் நகருக்கு செல்லும் நிலை தோன்றி இருக்கின்றது.

தவிஷா லாஹிண்டு பீரிஸ் எனும் 25 வயதுடைய இலங்கை மாணவன், இங்கிலாந்து, யோக்ஸயர் கவுண்டியில் அமைந்திருக்கும் செப்ஃபீலட்  நகரில் நேற்று முன்தினம் 02-11-2013 சனிக்கிழமை இரவு 10:30 மணிக்கு சடலாமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

தகவல் தொழிநுட்பத் துறையில் (IT) பட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் முகமாக இங்கிலாந்துக்கு வந்திருந்த இம்மாணவர், 2011ம் ஆண்டு செப்ஃபீல்ட் ஹலாம் பல்கலைக் கழகத்தில் தகவல் தொழிநுட்ப பட்டத்தைப் (IT Degree) பெற்றிருந்தார்.

murder

தான் கற்று, பட்டம் பெற்ற தகவல் தொழிநுட்பத் துறைக்கு அமைவான வேலைக்கு முதன் முதலாக  இன்று திங்கட்கிழமை பீரிஸ் செல்ல இருந்தார்.  IT ஆலோசகருக்கான (Consultant) சிறந்த வேலை அவருக்கு கிடைத்திருந்தது. தனது கனவு, தன் பெற்றோரின் எதிர்பார்ப்புக்கள் அத்தனையும் கலைந்து இன்று சடலமாக மருத்துவமனையில் உறங்குகிறார் பீரிஸ்.

டொமினோஸ் பீஸா டெலிவரி சாரதியாக வேலை செய்துவந்த பீரிஸ், கடந்த சனிக்கிழமை இரவு இறுதியாக ஓர் ஓடரைக் கொடுப்பதற்கு தனது காரில் சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும், குறித்த டொமினஸ் பீஸா நிறுவனத்துக்குத்  திரும்பாத பீரிஸிற்கு, அவர் வேலை செய்த பீஸா நிறுவனத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு தொடுக்கப்பட்டது.  நீண்ட நேரமாகியும் திரும்பாமலும், அவரது கைத்தொலைபேசி இயங்காததாலும் பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

பீரிஸ் இறுதியாக டெலிவரி செய்த முகவரிக்கு பொலிஸார் விரைந்தனர். அங்கு டொமினோஸ் நிறுவனத்தின் பீஸா ஆடையுடன் பீரிஸ் இரத்தக் காயங்களுடன் சடலமாக பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டார்.

Thavisha Lakindu Peiris, who was killed while making his last pizza delivery in Sheffield

இக் கொலையின் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் உடனடியாகக் கைது செய்திருக்கின்றனர். 25 வயதையுடைய சம்ராஸ் கான் எனும் நபரும், பெயர் குறிப்பிடப்படாத 17 வயதுடைய நபரும் செப்ஃபீல்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

பீரிஸின் பெற்றோரான தந்தை சரத் மஹிந்த மற்றும் தாய் சுதர்மா நாரங்கொட ஆகியோர் இலங்கையிலிருந்து தங்களது அதிர்ச்சியையும், கவலையையும் இங்கிலாந்து ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றனர்.

‘எமது பிள்ளையை இங்கிலாந்துக்கு படிப்பிக்கவே அனுப்பிவைத்தோம். அவருக்கு நல்ல எதிர்கால வாழ்வு அமைய வேண்டும் என்பதற்காகவேதான் இங்கிலாந்தை தெரிவு செய்தோம். எனினும் அது அவரது இறுதி யாத்திரைக்கான இடமாக தெரிவாகி விட்டது’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

இக்கொலைக்கான காரணங்கள், சந்தேக நபர்களின் கைதுகள், நீதி மன்ற விசாரணையும் தீர்ப்புக்களும் வெளிவராமல், சடலத்தை இங்கிலாந்தில் அடக்கம் செய்ய முடியாது.

தற்பொழுது பொலிஸார் அதி தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

murder
கொலை இடம்பெற்ற இடத்துக்கருகில் மலர் வைக்கப்பட்டிருக்கிறது

Published by

Leave a comment