வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் அவர்களின் முஹர்ரம் செய்தி

asminPMGG ஊடகப்பிரிவு

இன்றைய சூழ்நிலையில் இந்த தேசமும், முஸ்லிம் சமூகமும் ‘வினைத்திறனுடன் சிந்திக்கின்ற, தூரநோக்குடன் விடயங்களை அணுகுகின்ற மக்களின் நன்மைக்காக அர்ப்பணத்துடன் உழைக்கின்ற’ ஒரு அணியினரின் அவசியத்தை எதிர்பார்த்து நிற்கின்றது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு சார்பிலான வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் அவர்கள் வெளியிட்டுள்ள முஹர்ரம் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகின்றேன். ஹிஜ்ரி 1435 இஸ்லாமியப் புதுவருடத்தின் முதல் மாதமாகிய முஹர்ரம் இன்றோடு ஆரம்பமாகின்றது. இத்தினத்தில் ஒரு சில கருத்துக்களை எமது மக்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் சூறா அத்-தவ்பா: 36

‘ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆம்ராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ‘முளர்’ குலத்தாரின் ரஜப் மாதமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரி)

முஹர்ரம் என்பது ‘தடைவிதிக்கப்பட்ட’ என்ற அர்த்தத்தில் அதாவது ‘யுத்தம் புரிவதற்கு தடைவிதிக்கப்பட்ட’ மாதம் என்று பொருள்கொள்ளப்படுகின்றது. முஸ்லிம் உம்மத் மக்காவில் இருந்து மதீனா நோக்கி ஹிஜ்ரத் மேற்கொண்ட மாதம் இதுவாகும், நபிகளாரின் ஹிஜ்ரத்தை குறிக்கும் முஹர்ரம் மாதமே இஸ்லாமிய புதுவருடத்தின் முதல் மாதமாக அமையவேண்டும் என்று நபிகளாரைத் தொடர்ந்து ஆட்சிக்குவந்த கலீபாக்கள் தீர்மானம் செய்தார்கள், அதனடிபடையிலேயே இஸ்லாமிய வருடத்தின் முதலாவது மாதமாக முஹர்ரம் அமைந்திருக்கின்றது.

ஏனைய சமூகங்களைப்போன்று புதுவருடக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் வழமை, அல்லது அதனை ஒரு விஷேட தினமாக கருதும் வழமை இஸ்லாமிய சமூக அமைப்பிலும், நபிகளாரினதும் அவர்களைத் தொடர்ந்தவர்களினதும் வழிமுறையாக அடையாளம் செய்யப்படவில்லை. ஆனாலும் குறித்த மாதத்தில் நல்ல கருத்துக்களையும், சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்வது குறித்த ஆண்டைத் தொடங்கும் வேளையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியும்.

இலங்கையின் முஸ்லிம் உம்மத் பாரிய சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அது சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் வினைத்திறனுடன் சிந்திக்கின்ற, தூரநோக்குடன் விடயங்களை அணுகுகின்ற மக்களின் நன்மைக்காக அர்ப்பணத்துடன் உழைக்கின்ற ஒரு அணியினர் அவசியப்படுகின்றனர். அத்தகைய அணியினர் வேற்றுக் கிரகத்தில் இருந்து தருவிக்கப்படமுடியாது. எமது சமூகத்தில் இருந்தே அவர்கள் உருவாகவேண்டும். ஏனைய சமூகங்களுடன் நல்லிணக்கத்துடன் செயலாற்றுகின்ற, இந்த தேசத்தின் நன்மைக்காக, மக்களின் நன்மைக்காக சிந்திக்கின்ற உழைக்கின்ற அணியினரே இன்றைய தேவையாக இருக்கின்றது. இத்தகைய ஒரு அணியினரின் வருகைக்காக இந்த தேசமும், முஸ்லிம் சமூகமும் எதிர்பார்த்து நிற்கின்றது. அத்தகைய நல்ல மாற்றங்களை உருவாகும் மாதமாக, ஆண்டாக இந்த ஹிஜ்ரி ஆண்டு அமையவேண்டும் என்று அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்.

அ. அஸ்மின்

Published by

Leave a comment