செய்மதி!! அறியாதவர்கள் இருக்க முடியாது. எம்மைப் பொருத்தமட்டில் கடற்கரையில் இரவுவேளைகளில் நண்பனின் மடியில் படுத்துக்கொண்டு, ஆகாயத்தில் நட்சத்திரங்களுக்குள் நகர்ந்து செல்லும் மின் பூச்சிகள் போன்ற செய்மதிகளை அல்லது விமானங்களை பார்த்து இரசித்துவிட்டு, இரவுக் கனவுகளை தொடரும் ஓர் அறிவு!
ஆனால் உலகமே செய்மதிக்குள் சுருண்டு விட்டது. இறைவனால் இப்பூமியில் மனிதர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கும் மகத்தான அறிவு பொக்கிஸத்தில் உருவான மனிதனின் சிறந்த படைப்பே இந்த செய்மதிகள்.
இன்றைய உலகில் செய்மதிகள் ஆயிரக்கணக்கில் வானில் மிதந்து கொண்டிருக்கின்றன. இணையத்தளங்கள், போக்குவரத்துக்கள், நேரடி ஒலி/ஒளிபரப்புக்கள், வேவு பார்த்தல், தொலைத் தொடர்புகள், ஒட்டுக் கேட்டல் ஆகியவைகளுக்கு பிரதான தளமாக இயங்கும் செய்மதிகள் உலகின் பொருளாதாரத்தின் ஓர் மைல்கல் எனவும் வர்ணிக்கப்படுகிறது.
வேவு விமானங்கள் (Drones):
ஓரு நாட்டை பல்லாயிரம் துருப்புக்களை அனுப்பி கண்காணிப்பதை விட, ஓரு வேவு விமானத்தை அனுப்பி அந்நாட்டையே மறைமுகமாக ஆளமுடியுமான சக்தியை இந்த விமானங்கள் வழங்கி வருகின்றன.
வேவு விமானம் இயங்குவதற்கு செய்மதி உதவி இன்றியமையாதது. வேவு விமானத்தை இயக்கும் தளத்திலிருந்து செய்மதிக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. வேவு விமானத் தளத்திலிருந்து அனுப்பப்படும் செய்திகளும் கட்டளைகளும் செய்மதி ஊடாக வேவு விமானத்துக்கு தகவல்கள் பறிமாற்றப்படுகிறது. பின்னர் அதி நவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் கதிர் வீச்சு இயக்கத்தில் வேவு விமானம் உடனுக்குடன் செயற்படுகிறது.
இதே போல் எங்கோ இருந்து அனுப்படும் வேவு விமானங்கள் உரிய இலக்குகளை அதிநவீன புகைப்பட (கறுப்பு, வெள்ளை) காட்சிகளை ஏவிய தளத்துக்கு அனுப்புகிறது. இலக்கு வைக்கப்படும் நபர், இடம், நேரம், காலநிலை அனைத்தையும் நவீன கதிர்வீச்சுத் தொழிநுட்ப உதவியுடன் கச்சிதமாகப் படமெடுத்து அனுப்ப, தளத்திலிருந்து வரும் கட்டளைகளுக்கு உடன் செவிசாய்த்து பதில் கொடுக்கிறது வேவு விமானம்.
இருள்சூழ்நத பொழுதானாலும், போதிய வெளிச்சமற்ற காலநிலையிலும், நுணுக்கமான கதிர் (Laser, Sensor) தொழிநுட்பத்தின் உதவியுடன் படங்களை எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
உலகில் அமெரிக்காதான் இந்த வேவு விமானத்தைக் கண்டுபிடித்து தற்பொழுது செயற்படுத்தி வருகின்றது. (UAVs (Unmanned Aerial Vehicles) or RPAS (Remotely Piloted Aerial Systems) ) அமெரிக்காவின் அதிதொழிநுட்பத்தில் உருவாகி இருக்கும் இத்தகைய வேவு விமானங்கள் வாரத்தில் ஏழு நாட்களும் ஆகாயத்தில் உலாவரும். எனினும் ஓர் வேவு விமானம் ஆகக் கூடிய நேரமாக 17 மணித்தியாலங்களே ஆகாயத்தில் உலா வரும் என்பதுடன் குறித்த வேவு விமானம் ஏவிய தளத்திற்கு திருப்பி வரவழைக்கப்படும்.
ரியல் டைம் இமேஜ் (Real Time Image) எனும் தொழிநுட்ப புகைப்படங்களே இலக்குக்கு முதல் காரணிகளாக அமைகின்றன. குறி வைக்கப்பட்ட நபர் ஓர் இடத்தில் இருப்பதை அதே நிமிடத்தில் தளத்துக்கு அனுப்ப, மறுசெக்கனில் அவர் சடலமாக மீட்கப்படுகிறார்.
அமெரிக்காவிடம் தற்பொழுது இரு விதமான வேவு விமானங்கள் இருக்கின்றன.
1. MQ-1B Predator
2. MQ-9 Reaper
விமானத்தின் வடிவமைப்பை ஒத்திருக்கும் இத்தகைய வேவு விமானங்கள், குமிழ்வடிவான சென்சர்-லேசர் கதிர்களில் விமானத்தின் முன்னாள் மூக்குக்குள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ராடர் மற்றும் இன்பரா ( Infra) சிவப்பு படக் கருவிகள், நவீன வீடியோ கருவிகளுடன் ஏவுகனைகளும், லேசர் குண்டுகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன.
பல மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இவ்வேவு விமானங்களுக்கு விமானிகளோ, சேவகர்களோ தேவையில்லை. சாதாரண 4 விமானங்களின் கட்டுப்பாட்டு அறைகளுக்கு அமைக்கப்பட்டிருக்கும் தொழிநுடபம், ஒரு பரடேடர் விமானத்தை ஏவும் தளத்திற்கு வழங்கப்பட்டிருப்பது இதன் மற்றுமொரு விசேட அம்சம்.
இவ் வேவு விமானங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் மறைந்துள்ள தலிபான்களை கொன்றொழிப்பதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்டவை. இவ் வேவு விமானக் கண்டுபிடிப்பிலிருந்து இன்றுவரை குறித்த இருநாடுகளில் தலிபான்களை குறிவைத்து தாக்கி வருகிறது அமெரிக்கா. விசேட அம்சம் என்னவெனில் குறித்த வேவு விமானங்களால் குறி-இலக்கு வைக்கப்பட்ட எந்த தலிபான்களும் தப்பவில்லை என்பதுடன், இத்தகைய வேவு விமானங்களால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தலிபானின் உயர்மட்ட போராளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படும் இவ் வேவு விமானத்தின் தளம் அமெரிக்காவின் நெவேடா (Creech air force base in Nevada, USA) எனும் இடத்திலுள்ள கிறீச் விமான தளத்தில் அமைந்துள்ளது. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் அனுப்பப்படும் இத்தகைய வேவு விமானங்கள் பாதுகாப்பாக இதே தளத்திற்கு திரும்புகின்றன.
இத்தளத்தில் பிரதான கட்டுப்பாட்டறை அமைந்துள்ளது. வேவுவிமானத்தின் கட்டளைகளும், கட்டுப்பாட்டறையின் கட்டளைகளும் செய்மதிகள் ஊடாக கன செக்கனில் செயல்படுகின்றன.
2002ம் ஆண்டு ஹெலிகொப்டர் வடிவில் வேவு விமானங்கள் அமெரிக்காவால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. எனினும் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் பயணிக்கும் அத்தகைய வேவு விமானத்தில் இரண்டு ஏவுகணைகளை மாத்திரமே பொருத்த முடியுமாய் இருந்தது.
இதன் பின்னரே தற்பொழுது MQ-1B Predator, MQ-9 Reaper ஆகிய நவீன வேவு விமானங்கள் அத்துமீறி இலக்கை தாக்கி திரும்புகின்றன. தற்போதைய இந்த வேவு விமானங்கள் மணிக்கு 370 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றன. மணிக்கு 370 கி.மீ வேகத்தில் இலக்கைத் தாக்குவதால், தன்னை நோக்கி அதி வேகத்தில் சீறிவரும் இவ்வேவு விமானத்தை, குறிவைக்கப்பட்டரோ அல்லது அவரது சகாக்களோ திரும்பித்தாக்க முடியாது. தாக்கிவிட்டு அதிவேகத்தில் மேலெழுந்து விடும்.
இதைவிட நவீன ஹெலிகொப்டர் வடிவம் எனும் பெயரில் மற்றுமொரு வேவுவிமானத்தை அமெரிக்காவின் இராணுவப்பிரிவு தயாரிக்க இருக்கின்றது. 1.8 GP (ஜிகா பிக்சல்) சக்திவாய்ந்த அதிநவீன புகைப்படக் கருவிகளுடன் தயாராக இருக்கும் இந்த வேவு விமானம், ஆப்கானிஸ்தானை குறிவைப்பதற்காக தயாரிக்கப்பட இருப்பதாகவும் எதிர்வரும் 2014ல் அவை உலாவரும் எனவும் அமெரிக்க இராணுவப் பேச்சாளர் ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இந்த புதிய விமானம் 20,000 அடி உயரத்தில் இருந்தே தாக்க முடியும் என்பதுடன், 6.1 கி.மீ நிலப்பரப்பை ஒரே நேரத்தில் கண்காணித்து தாக்கியழிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வானில் தற்பொழுது 1071 செய்மதிகள் உலாவருகின்றன. அவற்றுள் 50 வீதமானவை அமெரிக்காவினுடையது என்பது பலருக்குத் தெரியாத உண்மை!!



Leave a comment