மரணச் செய்தியை பள்ளிவாயல்களில்அறிவிக்கலாமா?

janasaதேசிய தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் குழு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு. அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)இ ஆதாரம்: புஹாரீ 7352

மரணச்செய்தியை மக்களுக்கு அறிவிப்பது தொடர்பில் இஸ்லாமிய அறிஞர்கள் இரண்டாகப் பிரிந்து நிற்கின்றனர். சில அறிஞர்கள் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயம் என்றும் இன்னும் சில அறிஞர்கள் அது தடுக்கப்பட்ட விடயம் என்றும் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன? அறிஞர்கள் இவ்வாறு இரு விதமாகவும் கூறுவதற்குக் காரணம் மரணச் செய்தியை அறிவிப்பது கூடும் என்ற கருத்தை சில ஹதீஸ்கள் எமக்குத் தருகின்றன. இன்னும் சில ஹதீஸ்கள் கூடாது என்ற கருத்தைத் தருகின்றன.

கூடும் என்ற கருத்தைத் தரும் ஹதீஸ்கள் அனைத்தும் கூடாது என்ற கருத்தை தரும் ஹதீஸ்களை விட பலமுள்ளவைகளாக திகழ்கின்றன. இவ்விரு கருத்துக்களையும் தரக் கூடிய ஹதீஸ்களின் தரங்களை அடையாளம் கண்டு அதில் எது பலமுள்ளவையாக திகழ்கின்றதோ அதன் பிரகாரம் எமது நிலைப்பாட்டை அமைத்துக் கொள்வதே ஒரு உண்மை முஸ்லிமிற்கு அழகாக இருக்கும் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது.

மரணச் செய்தியை பிறருக்கு தெரியப்படுத்துவதின் வகைகள்

மரணச் செய்தியை மக்களுக்கு இரு வகைகளில் தெரியப்படுத்தலாம். ஒன்று தனிப்பட்ட முறையில் தெரிவிப்பது இரண்டாவது பகிரங்கமாக மக்களுக்கு தெரியப்படுத்துவது

1. தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்துவது:

மரணச் செய்தியை தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்துவதற்கு ஹதீஸில் தெளிவான ஆதாரம் இடம் பெற்றுள்ளது. இரவில் அடக்கம் செய்யப்பட்டவரின் கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், இது அடக்கம் செய்யப்பட்டது எப்போது?’ எனக் கேட்டார்கள். தோழர்கள் ‘நேற்றிரவுதான்’ என்றதும். ‘எனக்கும் சொல்லியனுப்பியிருக்கக் கூடாதா’ எனக் கேட்டார்கள். அதற்கு அம்மக்கள் ‘அதை நாங்கள் இருள் சூழ்ந்த இரவில் அடக்கினோம். எனவேதான் உங்களை விழிக்கச் செய்ய விரும்பவில்லை’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழத் தயாராக எழுந்து நின்றார்கள். நான் உட்பட அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்ததும் அவர்கள் ஜனாஸாத் தொழுதார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்அப்பாஸ் (ரழி) நூல்: புஹாரீ: 1321

மேற்குறித்த ஹதீஸில் ‘எனக்கும் சொல்லியனுப்பியிருக்கக் கூடாதா?’ என நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் கேட்டது மரணச் செய்தியை தனிப்பட்ட முறையில் தெரிவிக்கலாம் என்பதற்கான தெளிவான சான்றாகும். தனிப்பட்ட முறையில் சொல்லியனுப்புவது கூடாது என்றால் நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் மேற்குறித்தவாரு கேட்டிருக்கமாட்டார்கள். எனவே தனிப்பட்ட முறையில் மரணச் செய்தியை அறிவிக்கலாம் என்பதை இது காட்டுகின்றது.

2. பகிரங்கமான முறையில் தெரியப்படுத்துவது:

மரணச் செய்தியை தனிப்பட்ட முறையில் அறிவிக்கலாம் என்பதற்குரிய அனுமதி ஹதீஸில் வந்திருக்கும் அதே வேளை அச்செய்தியை பகிரங்கமாக அறிவிக்கலாம் என்பதற்கும் அனுமதி வந்துள்ளது. அதற்கான ஆதாரங்களை வழங்குகிறோம்.

1- நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி (மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: அபூஹுறைரா(ரழி) (புஹாரீ: 1245)

2- ஸைத் பின் ஹாரிஸா) அவர்களும் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்) அவர்களும் (அப்துல்லாஹ்) பின் ரவாஹா அவர்களும் (மூத்தா போர்க் களத்தில்) உயிர் நீத்துவிட்ட செய்தியைஇ அது (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப் பெற்று மக்களுக்கு) நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்: புஹாரீ: 3757

மேற்குறித்த இரண்டு ஹதீஸ்களிலும் நபி(ஸல்) அவர்கள் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள் என்றே இடம் பெற்றுள்ளது.

• அறிவித்தார்கள் என்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை பதம்

• மரணச் செய்தியை பகிரங்கமாக அறிவிப்பதால் ஏற்படும் பயன்கள்

மரணச் செய்தியை பிறருக்கு அறிவிப்பதால் அவர்களும் அதில் பங்கேற்கக் கூடிய நிலை உண்டு என்பதையும் நாம் மறுக்க இயலாது. ஜனாஸா விவகாரத்தில் பலர் கலந்து கொண்டு இறந்தவருக்காக பிரார்த்தனை புரிவதும் மார்க்கத்தில் வரவேற்கப்பட்ட ஒன்றாகும். இறந்த ஒருவருக்கு நூறுபேர் கொண்ட முஸ்லிம் குழுவினர் (இறுதித்) தொழுகை தொழுது, அவர்களில் ஒவ்வொருவரும் அவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) நூல்: முஸ்லிம் 1729

ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன? என வினவப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை) என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுறைரா(ரழி) நூல்: புஹாரீ: 1325

மேற் குறித்த இரு ஹதீஸ்களும் ஜனாஸாவில் கலந்து கொள்வதின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்த்துகின்றன. ஒருவர் இறந்த செய்தியை எந்தளவு நாம் மக்களுக்கு பகிரங்கப்படுத்துகின்றோமோ அந்தளவிற்கு மக்கள் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு அங்கு உள்ளது. மார்க்கத்தில் உள்ள இன்னுமொரு முக்கியமான அடிப்படையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது நன்மையான ஒரு காரியத்திற்கு வழிகாட்டுவதையும் இஸ்லாம் நன்மையாகக் கருதுகின்றது.

உதாரணமாக ஒருவர் மார்க்கத்தை தனிநபர்களிடத்தில் இரகசியமாக பிரச்சாரம் செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் அதனை மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்வதற்கு இன்னுமொருவர் களம் அமைத்துக் கொடுக்கிறார் எனில் களம் அமைத்துக் கொடுத்தவருக்கு நன்மையுண்டு என இஸ்லாம் கூறுகின்றது. ஏனெனில் மக்கள் அதிக பிரயோஜனம் அடைவதற்கு அவர் வழியை ஏற்படுத்தினார். இதே போன்றுதான் தனிப்பட்ட முறையில் மரணச் செய்தியை சொல்லி அதன் மூலம் ஜனாஸாவில் மக்கள் கலந்து கொள்வதை விட பகிரங்கமாக அதை அறிவிப்பு செய்வதினூடாக அதிகமான மக்களை அதில் கலந்து கொள்ள வைக்க எம்மால் முடியும்.

எனவே நாம் மரணச் செய்தியை பள்ளிவாயல்களில் அறிவித்தால் என்ன? பாதைகளில் அறிவித்தால் என்ன? அறிவிப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மாறாக நன்மைதான் அங்கு ஏற்படுகின்றது என்பதை யாரும் மறுக்க இயலாது. மரணச் செய்தியை பகிரங்கமாக அறிவிப்பது கூடாது என்று இடம் பெறும் ஹதீஸ்களின் நிலை மரணச் செய்தியை அறிவிப்பது கூடாது என்று கூறும் சிலர் அதற்கு இரண்டு ஹதீஸ்களை பிரதான ஆதாரமாகக் காண்பிக்கின்றனர்.

முதலாவது ஹதீஸ்:

மரணச் செய்தியை நீங்கள் அறிவிப்பதை விட்டும் நான் உங்களை எச்சரிக்கிறேன். மரணச் செய்தியை அறிவிப்பது அறியாமைக்கால பழக்கங்களில் ஒன்றாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி), நூல்: திர்மிதி 983

மேற்குறித்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானதாகும். இதில் இடம் பெறும் அபூஹம்ஸா என்பவரை அதிகமான அறிஞர்கள் பலவீனமாக்கியுள்ளனர். இமாம் அஹ்மத்: இவர் அறிஞர்களால் விடப்பட்டவர்இமாம் புஹாரீ: இவர் பலவீனமானவர். இமாம் அபூஹாதிம்: இவர் பலமற்றவர். இமாம் நஸாயீ: இவர் நம்பகமற்றவர்.

எனவே இந்த செய்தி பலவீனமானது என்பது எமக்கு தெளிவாகின்றது.

இரண்டாவது ஹதீஸ்:

ஹுதைபா(ரழி) அவர்கள் யாராவது ஒருவர் மரணித்தால் அவரது மரணச் செய்தியை அறிவிக்க வேண்டாம் எனக் கூறினார்கள். ஏனெனில் அது (பகிரங்கமாக) மரண அறிவிப்பாக ஆகி விடும் என நான் பயப்படுகிறேன். நபி(ஸல்) அவர்கள் மரணச் செய்தியை பகிரங்கமாக அறிவிப்பதை தடை செய்துள்ளதை நான் எனது இரு செவிகளினாலும் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: பிலால் பின் யஹ்யா, நூல்: இப்னு மாஜா 1476

மேற்குறித்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் தொடர்பறுந்ததாகும். அதில் இடம் பெற்ற பிலால் பின் யஹ்யா என்பவர் ஹுதைபா(ரழி) அவர்கள் வாயிலாக எனக்கு கிடைக்கப்பெற்றது என இச்செய்தியை அறிவிக்கிறார். ஹுதைபா (ரழி) அவர்களிடம் தான் இதைக் கேட்டேன் என்றோ அல்லது ஹுதைபா இதை எனக்கு அறிவித்தார் என்றோ இவர் இதை அறிவிக்கவில்லை. அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவிப்பு செய்கின்றார். அவர்களை சந்திக்கவில்லை. இமாம் இப்னுல் கத்தான்: ஹுதைபா(ரழி) வாயிலாக அறிவிப்பு செய்யும் எதிலும் இவர் தான் கேட்டதாகக் கூறவில்லை. இமாம் யஹ்யா: ஹுதைபாவுக்கும் இவருக்குமிடையில் தொடர்பறுந்துள்ளது என்று கூறியுள்ளார். (பார்க்க: இக்மாலு தஹ்தீபில் கமால்: 3:41)

மேற்குறித்த இரு ஹதீஸ்களும் ஆதாரபூர்வமானதெனில் எப்படி நாம் முடிவெடுப்பது? மேற்குறித்த இரண்டு ஹதீஸ்களும் பலவீனமானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு வாதத்திற்கு அவைகள் ஆதாரபூர்வமானவை என வைத்துக் கொண்டாலும் நபி(ஸல்) அவர்கள் மரணச் செய்தியை அறிவித்ததற்கு அவைகள் முரணாக அமையாது. ஏனெனில், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் அறிவிக்கும் மேற்குறித்த செய்தியில் மரணச் செய்தியை பகிரங்கப்படுத்துவது அறியாமைக்கால பழக்கங்களில் உள்ளது என்று அறிவிக்கிறார். மரணித்தவரின் பட்டம், பதவி, குலப்பெருமை போன்றதை வெளிக்காட்டும் அடிப்படையில் இருந்தால் அது கூடாது என முரண்பாடில்லாமல் புரியலாம்.

எனவே மரணச் செய்தியை பகிரங்கப்படுத்துவது கூடாது என இடம் பெற்ற ஹதீஸ் ஆதாரபூர்வமானது என வைத்துக் கொண்டாலும் பள்ளிவாயல்களில் அறிவிப்பது கூடாது என அதிலிருந்து விளங்க முடியாது என்பதே எமது கருத்தாகும். ஆனாலும் மரணச் செய்தியை பகிரங்கப்படுத்தக் கூடாது என்ற கருத்தில் இடம் பெற்ற எந்த ஹதீஸும் நாம் ஆய்வுக்கு உட்படுத்திய வகையில் ஆதாரபூர்வமானது இல்லை. நபி(ஸல்) அவர்கள் மரணச் செய்தியை பகிரங்கப்படுத்தியுள்ளார்கள்.

எனவே மரணச் செய்தியை பள்ளிவாயல்களில் அறிவிப்பது மார்க்கரீதியாக அனுமதிக்கப்பட்ட விடயம் என்பதையே இறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். மரணச் செய்தியை பகிரங்கப்படுத்தக் கூடாது என கடந்த காலங்களில் நாம் கூறியதையும் மறுக்கமாட்டோம். ஹுதைபா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் அடிப்படையில் இக்கருத்தை மக்களுக்கு முன்வைத்திருந்தோம். அது பலவீனமானது என்பது மறு ஆய்வின் மூலம் எமக்கு தெரிய வந்துள்ளபடியால் பழைய எமது நிலைப்பாட்டை இறைவனுக்கு அஞ்சி நாம் மாற்றிக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல இறைவன் எமக்கு சத்திய வழியைக் காட்டுவானாக!

Published by

Leave a comment