கொழும்பு: மாலபேயில் கைப்பற்றப்பட்ட 2000 ரூபா போலி நாணயத்தாளில் காணப்பட்ட இலக்கத்தைக் கொண்ட மற்றுமொரு 2000 ரூபா போலி நோட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலி நோட்டை கொடுத்து ரீலோட் கார்ட் வாங்கிவிட்டு மிகுதி பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக கடை உரிமையாளர் ஒருவர் யக்கலமுல்ல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
யக்கலமுல்லை, நாகியாதெனிய பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :-
யக்கலமுல்ல, நாகியாதெனிய பிரதேசத்திலுள்ள கடை ஒன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கையடக்க தொலைபேசிக்கான 50 ரூபா பெறுமதியான இரண்டு கார்ட்களை கொள்வனவு செய்துவிட்டு மிகுதி பணத்தையும் பெற்றுவிட்டுச் சென்றுள்ளார்.
அந்த நாணயத்தாளை பார்க்கும் போது போலியானது போன்று இருப்பதாக சந்தேகித்த கடை உரிமையாளர் அந்த நாயணத்தாளை யக்கலமுல்லை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த போலி நோட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அது மாலபே பிரதேசத்தில் அதிரடியாக கைப்பற்றப்பட்ட பெருந்தொகை 2000 ரூபா நாணயத் தாளில் காணப்பட்ட பி 67799159 என்ற அதே இலக்கங்களைக் கொண்டவை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போலி நாணயத்தாள்கள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவ்வாறான போலி நோட்டுக்கள் தொடர்பில் தகவல் கிடைப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸ் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
போலி நாணயத்தாள்கள் கையிலோ அல்லது அருகிலோ வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸ் திணைக்களம் தெரிவிக்கிறது. Tk

Leave a comment