மட்டக்களப்பு: பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்கு நல்ல நண்பர்களாக திகழ வேண்டும் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் நந்த மல்லவாராச்சி தெரிவித்தார். குறித்த அமைச்சின் செயலாளராக பதவியேற்று முதற்தடவையாக நேற்று புதன்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போது கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஏனைய பொலிஸாருக்கும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் பொலிஸாருக்கு உள்ளது.கடந்த 30 வருட காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாக வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் காணப்படுகின்றனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் நீங்கள் மக்களுக்காக சேவையாற்ற வேண்டும்.பொது மக்கள் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் செய்ய வரும் போது அவர்களுடன் நீங்கள் கடுகடுப்பாக நடந்து கொள்கின்றனர்.அவ்வாறு ஒரு போதும் நடந்து கொள்ளக்கூடாது.அவர்களுடைய தேவைகளை முடியுமான வரையில் நிறைவேற்றி வைக்க வேண்டிய பொறுப்பு உங்களிடமே உள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழகாட்டலில் பொலிஸ்மா அதிபரின் அனுமதியுடன் பல வேலைத்திட்டங்களை நாம் செய்து வருகிறோம்.
பொலிஸாருக்கென தனிமையான எகடமியொன்றை கல்வி ரீதியாக மிக விரைவில் ஆரம்பிக்க உள்ளோம்.
இது தவிர நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் கணனிகளை வழங்கி அனைத்து செயற்பாடுகளையும் கணனி ஊடாக செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
ஆகவே பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் மக்களின் நண்பர்களாகவும் நியாயமானவர்களாகவும் செயற்படும் பட்சத்தில் பொலிஸ் நிலையங்களை நாட்டில் சிறந்த சேவை செய்யக் கூடியவையாக கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கபில உபேசகர,கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர,மட்டக்களப்பு அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன்,திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர,கந்தளாய் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment