– தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் குழு
கடந்த 22.10.2013 அன்று தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டமொன்று நடைபெற்றது. காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடை பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ‘பெண்கள் முகத்தையும், முன் கைகளையும் அவசியம் மறைக்க வேண்டுமா?’ எனும் தலைப்பு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆய்வின் இருதி முடிவாக பெண்கள் முகம் உட்பட முன்கைகளைத் திறக்கலாம் என்றும், முகத்தையோ முன் கைகளையோ மறைப்பதற்கு குர்ஆன் அல்லது ஹதீஸில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தச் சான்றுகளும் இல்லை என்பதும் முடிவாக எட்டப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த மார்க்கத் தீர்ப்பைப் பெறுவதற்குக் காரணமாகத் திகழ்ந்த ஆதாரங்களை ஆய்வாக இங்கு வெளியிடுகிறோம்.
ஆய்வைப் படிப்பதற்கு முன்:
இஸ்லாத்தின் மூலாதாரம் திருக்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் தான். இதில் இம்மியளவும் மாற்றுக் கருத்தில்லை. மனிதர்களுக்கு ஏற்படும் கருத்து முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இஸ்லாம் இந்த இரு மூலாதாரங்களை மாத்திரமே அணுகச் சொல்கிறது.
அல்லாஹ் கூறுகிறான் ‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்‘ (அல்குர்ஆன் 04:59)
நமது சமுதாய மக்கள் குர்ஆன், ஹதீஸ் எனும் இரு மூலாதாரங்களை விட்டு விட்டு பெரியார் வழி முறை, ஊர் வழக்கம், பெரும்பான்மைப் பக்கம் என்ற தவறான அளவு கோல்களை மூலாதாரங்களாகக் கைக்கொள்ள ஆரம்பித்தமையினாலேயே வழி தவறிச் சென்றார்கள் என்பது வெள்ளிடை மலையாகும். வழி தவறிய இந்த மக்களை சீர்திருத்தவென ஆங்காங்கே பல தஃவா இயக்கங்களும், சமூக அமைப்புக்களும் முளைத்ததை வரலாற்று நெடுகிலும் நாம் காணுகிறோம். உத்வேகத்துடன் துவக்கப்பட்ட இந்த இயக்கங்கள் காலவோட்டத்தில் தனது வீரியத்தை இழந்து ஆற்றில் அடித்துச் செல்லப்படும் சருகுகள் போன்று மாறியமைக்கு அடிப்படைக் காரணம் ஆய்வின்மையே என ஒரு வரியில் சொல்லி விடலாம். ஆம்! இந்த இயக்கங்களின் உலமாக்கள் ஆய்வு செய்வதில்லை! அல்லாஹ் நாடிய, அருள் செய்த ஒரு சில நல்லறிஞர்களைத் தவிர அதிகமான உலமாக்கள் மார்க்கத்தை ஆய்வு செய்வதில்லை. இது மிகைப்படுத்தலல்ல. உண்மையையே கூறுகிறோம். இஸ்லாத்தின் மூலாதாரம் குர்ஆனும், ஹதீஸும் தான் எனக் கூறிக் கொள்ளும் சிலரும் இந்நிலையில் தான் உள்ளனர். போதாமைக்கு பிற அறிஞர்களால் செய்யப்பட்ட ஆய்வுகளைக் கூட இவர்கள் முறையாகப் படிப்பதோ, அவற்றை சீர்தூக்கிப் பார்ப்பதோ இல்லை. வாழையடி வாழையாக எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்களோ அந்நிலைப்பாட்டையே தொடர்ந்தும் கடைபிடிக்கிறார்கள். எம்மைப் பொருத்தமட்டில் ஆய்வு தான் அமைப்பின் ஆணி வேர் எனும் கொள்கையில் உள்ளோம். ஆய்வு செய்யாத ஆலிம் அமைப்பிற்கு அவசியமில்லை எனும் நிலைப்பாட்டில் உள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடுவோர் அனைத்து நன்மைகளும் அளிக்கப்பட்ட அருட்கொடை பெற்றவராகி விடுகின்றார். அபரிமிதமான நன்மைகளைப் பெற்றவராகி விடுகின்றார்.
அல்லாஹ் கூறுகிறான் ‘தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை‘ (அல்குர்ஆன் 2:269)
நபி (ஸல்) அவர்களும் இதே கருத்தைக் குறிப்பிடுகின்றார்கள்.
‘எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகின்றான். நான் விநியோகிப்பவன்தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை முஆவியா (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். நூல்: புகாரி 71
மார்க்கத்தைக் கற்று, ஆய்வு செய்து, தீர்ப்பு வழங்குவோருக்கு நபி (ஸல்) அவர்கள் உயரிய இடத்தை அளிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் பசுமையான செடி கொடிகளையும் முளைவித்தன. மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தமது கால்நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைவிக்கவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 79
மார்க்கத்தில் ஆய்வு செய்கின்ற சாராரை நபி (ஸல்) அவர்கள், நீரை உள்வாங்கி, புற்பூண்டுகளை முளைக்கச் செய்கின்ற நிலத்திற்கு ஒப்பிட்டு, அவர்களை முதல் தரத்தில் வைக்கின்றார்கள்.
பெண்கள் முகத்தையும், முன்கைகளையும் மறைப்பது அவசியமல்ல என்பதற்கான 10 ஆதாரங்கள்
ஆதாரம் 01:
لَا يَحِلُّ لَكَ النِّسَاءُ مِنْ بَعْدُ وَلَا أَنْ تَبَدَّلَ بِهِنَّ مِنْ أَزْوَاجٍ وَلَوْ أَعْجَبَكَ حُسْنُهُنَّ إِلَّا مَا مَلَكَتْ يَمِينُكَ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ رَقِيبًا
அல்லாஹ் கூறுகிறான் அடிமைப் பெண்கள் தவிர வேறு பெண்கள் இதன் பிறகு உமக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்த போதும் சரியே. (அவர்களை விவாகரத்துச் செய்து விட்டு) அவர்களுக்குப் பகரமாக வேறு மனைவியரை மாற்றுவதும் கூடாது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான். (33:52)
இந்த வசனத்தில் ‘அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்த போதிலும்‘எனும் வாசகம் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும். அன்றைய காலத்து முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை துணி கொண்டு மறைத்திருந்தால் இவ்வாறு அல்லாஹ் சொல்ல மாட்டான். பெண்கள் தமது முகத்தை மறைக்காமல் திறந்து வைத்திருக்கும் போது தான் ‘அழகு கவர்தல்‘ எனும் பேச்சு வரும். ஆக இந்த வசனத்திலிருந்து நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கவில்லை என்பது நிரூபணமாகிறது.
ஆதாரம் 02:
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. ‘அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (33:59)
இந்த வசனத்தில் பெண்கள் ‘அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும்‘ ஜில்பாப் அணிய வேண்டுமென அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கிறான். ஒரு பெண் அறியப்படுவதாயின் அவள் முகத்தை மறைத்திருக்கக் கூடாது. திறந்திருந்தால் தான் அவளை இன்னார் என அடையாளம் காண முடியும். சிலர் ஜில்பாப் என்றால் முகத்திரை என தவறாக அர்த்தம் செய்து வருகின்றனர். ஆனால் ஜில்பாப் என்பது நீளமான அங்கிக்கு அறபியில் சொல்லப்படும் வார்த்தையாகும். இந்த வசனமும் பெண்கள் முகத்திரை அணிவது அவசியமல்ல என்பதற்குச் சிறந்த சான்றாகும்.
ஆதாரம் 03
لَيْسَ عَلَى الْأَعْمَى حَرَجٌ وَلَا عَلَى الْأَعْرَجِ حَرَجٌ وَلَا عَلَى الْمَرِيضِ حَرَجٌ وَلَا عَلَى أَنْفُسِكُمْ أَنْ تَأْكُلُوا مِنْ بُيُوتِكُمْ أَوْ بُيُوتِ آَبَائِكُمْ أَوْ بُيُوتِ أُمَّهَاتِكُمْ أَوْ بُيُوتِ إِخْوَانِكُمْ أَوْ بُيُوتِ أَخَوَاتِكُمْ أَوْ بُيُوتِ أَعْمَامِكُمْ أَوْ بُيُوتِ عَمَّاتِكُمْ أَوْ بُيُوتِ أَخْوَالِكُمْ أَوْ بُيُوتِ خَالَاتِكُمْ أَوْ مَا مَلَكْتُمْ مَفَاتِحَهُ أَوْ صَدِيقِكُمْ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَأْكُلُوا جَمِيعًا أَوْ أَشْتَاتًا
உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. (24:61)
இந்த வசனம் பிறர் வீட்டில் உண்பதைப் பற்றிப் பேசுகிறது. ஒரு மனிதன் மற்ற குடும்பத்தினரோடு சேர்ந்து உணவு உண்ணலாமா? எனும் சந்தேகத்திற்கு இவ்வசனம் தீர்வு சொல்கிறது. ஆண்கள், பெண்கள் அனைவரும் சேர்ந்தும், தனித்தனியாகவும் உணவு உண்ணலாம். நெருங்கிய நண்பர்களாக இருந்தால் இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து உணவு உண்ணலாம். ஆனால் இஸ்லாமிய முறைப்படி ஆடை அணிந்திருக்க வேண்டும். ஒட்டுவதோ, உரசுவதோ கூடாது. குறித்த வசனத்தில் நாம் சான்றாக முன் வைப்பது யாதெனில் இரு நண்பர்கள் குடும்பமாக உட்கார்ந்து உண்ணும் போது எங்கே முகம் மறைப்பது? உணவு உட்கொள்வதாயின் முகத்திரை அணிய முடியாதல்லவா? ஆதலால் இந்த வசனமும் பெண்கள் முகத்திரை அணிவது அவசியமல்ல என்பதற்குப் போதுமான சான்றாகும்
ஆதாரம் 04
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள். பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்!என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)நூல்: முஸ்லிம் (1607)
இந்த ஹதீஸில் ‘கன்னங்கள் கருத்த பெண்மணி‘ எனும் வாசகம் சிந்திக்கத்தக்கதாகும். குறித்த பெண்மணி தமது முகத்தை ஏதாவது கொண்டு மறைத்திருந்தால் அறிவிப்பாளரால் ‘கன்னங்கள் கருத்த பெண்மணி‘என்று அறிவித்திருக்க முடியாது. ஆதலால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நபியின் முன்னிலையிலேயே பெண்கள் முகத்திரை இன்றிக் காட்சி தந்துள்ளனர் என்பது தெரியவருகின்றது. இதுவும் பெண்கள் முகத்திரை அணிவது அவசியமல்ல என்பதற்குப் போதுமான சான்றாகும்.
ஆதாரம் 05
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து> அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட வந்துள்ளேன் என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தமது தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து> அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால்அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்! என்று சொன்னார். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) நூல் : புகாரி (5030)
பெண்கள் முகத்திரை அணிவது அவசியமாக இருந்திருந்தால் குறித்த பெண்மணி நபித்தோழர்கள் பிரசன்னமாயிருக்கும் சபைக்கு முகத்தைத் திறந்து கொண்டு வந்திருக்க மாட்டார். அப் பெண் முகத்தைத் திறந்து வந்ததால் தான் அல்லாஹ்வின் தூதராலும் ஏனைய தோழர்களாலும் அப்பெண்ணைப் பார்க்க முடிந்தது. பெண்கள் முகத்தைத் திறப்பது கூடாதென்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் உடனே அதனைக் கண்டித்திருப்பார்கள். ஆகவே இதுவும் முகத்திரை அவசியமில்லை என்பதற்கான சான்றுகளில் ஒன்றாகும்.
ஆதாரம் 06
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் .இருட்டின் காரணமாக அவர்களை யாரும் (ஆணா பெண்ணா என்று) அறிந்துகொள்ள முடியாது. (நூல் : புகாரி 578)
இந்த ஹதீஸில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பயன்படுத்தும் ‘இருட்டின் காரணமாக அவர்களை ஆணா? பெண்னா? என அடையாளம் காண முடியாது‘ எனும் வார்த்தை ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய வார்த்தையாகும். அக்காலத்துப் பெண்கள் முகத்திரை அணியும் வழக்கமுள்ளவர்களாகத் திகழ்ந்திருந்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் இப்படி அறிவித்திருக்க மாட்டார்கள். ‘முகத்திரையின் காரணத்தால்‘ என்று அறிவித்திருப்பார்கள். ‘இருட்டின் காரணமாக‘என்று சொல்வதாயின் இருளால் தான் அவர்களை அடையாளம் தெரியவில்லை. இருள் நீங்கி விட்டால் அவர்களை அடையாளம் காண முடியும் என்பதே ஆயிஷா (ரலி) அவர்களின் வாக்கு மூலமாகும். எனவே பெண்கள் முகத்திரை அணிவது அவசியமல்ல என்பதற்கு இதுவும் தெளிவான சான்றாகும்.
ஆதாரம் 07:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி(ஸல்) அவாகள்பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள் எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம்நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்‘ எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் ஸைனப்‘ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் எந்த ஸைனப்? எனக் கேட்டதும் பிலால்(ரலி)அப்துல்லாஹ்வின் மனைவி‘ எனக் கூறினார். உடனே நபி(ஸல்) ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது எனக் கூறினார்கள். நூல்: புகாரி (1466)
பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை என்பதற்கு இந்த ஹதீஸும் சான்றாகும். இதில் ஸைனப் (ரலி) அவர்களும் அன்ஸாரிப் பெண்ணும் சேர்ந்து பிலால் (ரலி) அவர்களிடம் ‘நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்‘என்று கூறுகிறார்கள். இவ்வாறு கூறுவதாயின் அந்த இரு தோழிகளும் தமது முகத்தைத் திறந்தல்லவா வைத்திருக்க வேண்டும்? முகம் மறைக்கப்பட்டிருந்தால் பிலாலிடம் இவ்வாறு சொல்வதில் எவ்வித அர்த்தமுமில்லை. ஆகவே நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கவில்லை என்பது புலனாகிறது.
ஆதாரம் 08:
ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் வீட்டாரில் ஒரு பெண்மணியிடம்இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அப்பெண்மணி, ஆம் (தெரியும்) என்று கூறினார். அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவள் ஒரு மண்ணறை அருகே அழுது கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அவளைக் கடந்து சென்றார்கள். அப்போதுஅல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு என்று நபி (ஸல்) அவாகள் சொன்னார்கள். அப்பெண்என்னைவிட்டு விலகிச் செல்வீராக. எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற்படவில்லை (அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்) என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள் (பேசாமல்) அவளைக் கடந்துசென்றுவிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அவ்வழியே சென்றார். அவர்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்? என்று கேட்டார். அப்பெண்எனக்கு அவர் யாரென்று தெரியாது எனக் கூறினாள். அம்மனிதர்அவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்று சொல்ல அவள், நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்குச் சென்றாள். அங்கு அவள் வாயிற்காவலர் யாரையும் காணவில்லை. ஆகவே அவள்அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரென்று நான் அறியவில்லை என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள்பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும் என்று சொன்னார்கள். புகாரி 7154
இச்செய்தியில் நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்கள் தமது குடும்பப் பெண்மணிகளில் ஒருவரிடத்தில் ‘இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா?’ என்று கேட்கிறார்கள். இவ்வாறு கேட்பதாயின் ஏற்கனவே அனஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணைக் கண்டிருக்க வேண்டும். நபியவர்கள் உயிர் வாழ்ந்த காலத்திலேயே அப்பெண் தனது முகத்தை மறைக்கவில்லை என்பது இதிலிருந்து தெரியவருகின்றது. இது போக பிற்காலத்தில் அப்பெண் முகத்தை மறைக்காமல் வந்ததால் தான் அனஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணை அடையாளம் கண்கிறார்கள். இதுவும் கூட முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கத் தேவையில்லை என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.
ஆதாரம் 09:
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம்சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா? என்று கேட்டார்கள். நான்ஆம்; (காட்டுங்கள்) என்று சொன்னேன். அவர்கள்இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்துநான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவேஎனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!என்றார். நபி (ஸல்) அவர்கள்நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணிநான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால் (வலிப்பு வரும் போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர்தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்த படி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார். புகாரி 5652
உம்மு ஸுபைர் எனும் இந்தப் பெண்மணி தமது முகத்தைத் துணி கொண்டு மறைத்திருந்தால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் அவரை அடையாளம் கண்டிருக்கவோ பிறருக்கு அடையாளம் காட்டிருக்கவோ முடியாது. இன்னும் சொல்லப்போனால் இச்செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அவர்கள் உம்மு ஸுபரை கஃபாவின் அருகே கண்ட போது அவரை ‘கருப்பான பெண்‘ என வர்ணித்திருப்பதிலிருந்து உம்மு ஸுபர் அவர்கள் தமது முகத்தை மறைக்கவில்லை என்பது தௌ;ளத் தெளிவாக விளங்குகிறது. ஆதாலால் சுவனத்துப் பெண்மணியாகத் திகழ்ந்த அப்பெண்ணே முகத்தை மறைக்கவில்லை எனும் போது எமது பெண்கள் கட்டாயம் மறைக்க வேண்டும் என நிர்ப்பந்திப்பது நியாயமா? என சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம் அல்லவா?
ஆதாரம் 10:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரிலிருந்து திரும்பி வந்தனர். அப்போது கறுப்பு நிறமுடைய பெண் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களை நல்லபடியாகத் திருப்பிக் கொண்டு வந்து சேர்த்தால் உங்கள் முன்னால் கொட்டு‘ அடித்து பாட்டுப் பாடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன்‘ எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீ நேர்ச்சை செய்திருந்தால் அவ்வாறு செய்! இல்லாவிட்டால் செய்ய வேண்டாம்‘ எனக் கூறினார்கள். உடனே அப்பெண் கொட்டு அடிக்கலானார். அபூபக்ர் (ரலி) வந்தார்கள். அப்போதும் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் அலீ (ரலி) வந்தார்கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உஸ்மான் (ரலி) வந்தார் கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உமர் (ரலி) வந்தார்கள். உடனே அவர் கொட்டை கீழே போட்டார்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)நூல்: திர்மிதீ 3623
இந்த ஹதீஸும் நபியவர்கள் காலத்தில் பெண்கள் தமது முகத்தை மறைக்கவில்லை என்பற்கான சான்றுகளில் ஒன்றாகும். காரணம் நேர்ச்சை செய்த அப்பெண் முகத்தை மறைத்திருந்தால் இந்த ஹதீஸை அறிவிக்கும் புரைதா (ரலி) அவர்கள் அப்பெண்ணை ‘கருப்பு நிறமுடைய பெண்‘ என வர்ணணை செய்திருக்கமாட்டார்கள். ஆக முஸ்லிம் பெண்கள் தமது முகங்களை துணிகள் கொண்டு மறைப்பது அவசியமில்லை என்பது தௌ;ளத் தெளிவாக நிரூபணமாகிறது.
இறை விசுவாசிகளின் அன்னையர்களுக்குத் தனிச் சட்டமா?
நபிகளாரின் மனைவிமார்களைப் பொருத்தமட்டில் அவர்கள் தமது முகங்களைத் திறக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை. காரணம் அல்லாஹ் அவர்களுக்கு ஹிஜாப் எனும் திரையை இட்டுக் கொள்ளுமாறு தனியாகக் கட்டளை பிறப்பித்துள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒரு போதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது. (33:53)
இந்த இறை வசனத்தின் படி நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்குத் தனிச் சட்டமென்பதை நாம் புரியலாம். நமது இந்நிலைப்பாட்டை பின்வரும் நிகழ்வு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்கிறது.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ் ஸஹ்பா என்னுமிடத்தில் ஹஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா – மண விருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோஃ இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிடஃ அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டது. பிறகுஃ அதில் பேரீச்சம்பழம்ஃ பாலாடைக் கட்டிஃ நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்லிம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள் ஸஃபிய்யா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (நபியவர்களின் துணைவி-)யரில் ஒருவரா அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா என்று பேசிக் கொண்டனர். ஸஃபிய்யா அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப் – திரையிட்டுக் கொள்ளும்படி கட்டளையிட்)டால்ஃ அவர் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால்ஃ அவர் அடிமைப் பெண்களில் ஒருவர் என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்ட போது நமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கை அமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள். ஆதாரம்: புஹாரி 4213
பெண்களின் முன் கைகள் அவ்ரத்தா?
பெண்கள் தமது முகத்தை மறைப்பது அவசியமல்ல என்பதற்கு 10ஆதாரங்களை மேலே கண்டோம். பின்வரும் ஆதாரம் பெண்கள் தமது முன் கைகளை மறைப்பது அவசியமல்ல என்பதை அழகாக விளக்குகிறது.
ஆதாரம் 01:
தவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். நபியவர்கள் அப்பெண்மணியின் கரத்தில் அடிக்கலானார்கள். நபிகள் நாயகத்தின் இச்செயலை அப்பெண் பாத்திமா (ரலி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள்.உடனே பாத்திமா (ரலி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி இதனை ஹஸனின் தந்தை (அலி ரலி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள் எனக் கூறினார். பாத்திமா (ரலி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா? எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள் அம்மாலையை கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக் கொண்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும் எனக் கூறினார்கள். (நஸாயீ: 5140)
இந்த ஹதீஸ் பெண்கள் தங்க ஆபரணங்கள் அணியலாமா? இல்லையா? எனும் சர்ச்சைக்குத் தீர்வு சொல்லும் ஹதீஸ்களில் பிரதான ஹதீஸ் என்பதை தாங்கள் நன்கறிவீர்கள். (தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தமட்டில் பெண்களும் தங்க ஆபரணங்கள் அணியக் கூடாது எனும் நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது) இது ஒரு புறமிருக்க இந்த ஹதீஸில் {ஹபைராவின் மகள் (ஹிந்த்) நபி (ஸல்) அவர்களிடம் தங்க மோதிரம் அணிந்து வருகிறார். நபியவர்கள் அப்பெண்ணின் கரத்தில் அடிக்கிறார்கள். நமது வாதம் யாதெனில் அப்பெண் தன் கையில் தங்க மோதிரம் அணிந்து வந்ததை நபியவர்கள் காண்பதாயின் அப்பெண்ணின் முன்கை திறந்த அமைப்பில் இருந்திருக்க வேண்டும். குறித்த பெண்மணி கையுரை அணிந்திருந்தால் அப்பெண் தங்க மோதிரம் அணிந்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் அறிந்திருக்கவும் மாட்டார்கள். அடித்திருக்கவும் மாட்டார்கள். ஆக பெண்கள் முகம் உட்பட தமது முன்கையைத் திறந்து கொள்ள மார்க்கம் அனுமதிக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகின்றது.
Leave a comment