மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவே தனியார் பல்கலைக்கழகங்கள்

graduate3[1]உயர் கல்வி அமைச்சர்

மட்டக்களப்பு: பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க தெரிவாகியும், உள்வாங்கப்படாத ஏனையவர்களுக்கும் கற்கக் கூடிய நிறுவனங்கள் வேண்டும் என்ற வகையிலேயே தனியார், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றன என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (28) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தின்  கற்பித்தல் அலகுக்கான கட்டிடத் தொகுதி அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், வருடாவருடம் பாடசாலைக்கல்வியை முடித்துக் கொண்டு உயர் கல்விக்குத் தெரிவாகும் 1 லட்சத்து 50ஆயிரம் வரையானோரில் 26 000 பேரே பல்கலைக்கழகங்களுக்கு உள் வாங்கப்படுகின்றனர். இதில் விடுபடுபவர்கள் உயர்கல்வியை எங்கு கற்பது? ஏனையவர்களும் கல்வியைக் கற்பதென்பது வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களின் உள்வருகையினாலேயே சாத்தியமாகும். எனவேதான் இவ்வாறான உயர் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கிறோம்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இருந்தது போன்று பல்கலைக்கழகங்கள் இப்போது இல்லை. சிறந்தளவில் அபிவிருத்திகள் செய்யப்பட்டு அதிகளவான மாணவர்கள் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை முடிந்தவரையில் செய்து கொடுத்துள்ளோம்.

அண்மையில் யுனெஸ்கோ மேற்கொண்ட ஆய்வின் படி இலங்கையிலிருந்து வருடாந்தம் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர் கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுபவர்களின் வீதம் 300ஆக அதிகரிக்கப்பட்டு தற்பொழுது அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 26ஆயிரமாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 9ஆயிரமாக காணப்பட்டது.

 குறிப்பாக க.பொ.த உயர்தரத்தில் மருத்துவத்தில் கற்று 3ஏக்களை பெறுபேறாக பெற்றும் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்கள் பாகிஸ்தான், பூட்டான், பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர். குறித்த நாடுகளை இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பின்தங்கிய நாடுகளாக காணப்படுகின்றன.

 அதனை கருத்திற்கொண்டு பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நல்ல பெறுபேறுகளைப் பெற்று இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காதவர்களுக்கு உள்நாட்டில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களையும் தனியார் பல்கலைக்கழகங்களையும் நிர்மாணித்து அவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பை உள்நாட்டில் பெற்றுக் கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது.  அவ்வாறு அனுமதி வழங்கப்படுபவர்களில் 20 சதவீதமானோருக்கு இலவசமாக கல்வி கற்பதற்கான புலமைப்பரில்களும் வழங்கப்படவுள்ளன.

இந் நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா, மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியக்கலாநிதி ரி.சுந்தரேசன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்திய நிபுணர் எஸ்.முருகானந்தம், வைத்திய நிபுணர்கள், மருத்துவ பீட மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். lk

Published by

Leave a comment