ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற வடகிழக்கில் தற்போது அதிகாரம் போராட்டம் இடம்பெறுகிறது- காத்தான்குடி நகர சபை முதல்வர் அஸ்பர்

aswar ucபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் கல்விக்குழுவின் ஏற்பாட்டில் காத்தான்குடி 3பி ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் அனுசரனையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு 27-10-2013 கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

கடந்த 30வருட கால யுத்தத்தின் போது வட கிழக்கு மாகாணங்களில் மக்களின் உடைமைகள் பறிக்கப்பட்டு ஆயுத ரீதியான போராட்டம் இடம்பெற்று வந்தது. ஆனால், இன்று அந்த நிலை மாறி முஸ்லிம்களின் கல்வியை முடக்குவதற்கும், அவர்களது காணி விவகாரங்களில் தலையீடு செய்வதற்கும் ஒரு அதிகார ரீதியான போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இன்று எமது முஸ்லிம் மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தை படித்து விட்டு சில நிறுவனங்களுக்குச் சென்று பாடநெறிகளைப் பூர்த்தி செய்து விட்டு வெளிநாடு சென்று விடுகிறார்கள்.

இதனால் முஸ்லிம்களில் பல்கலைக்கழகத்திற்கு செல்வோரின் வீதம் குறைந்துள்ளது மாத்திரமல்லாமல் அரசாங்கத் திணைக்களங்கள்,காரியாலயங்களில் தொழில் புரியும் ஊழியர்களிலும் முஸ்லிம்களை விட மற்ற மதத்தவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

குறிப்பாக எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்வாக உத்தியோகத்தர்களாக கடமையாற்றுபவர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள் அல்லாதோராக இருக்கின்றார்கள்.

எமது உரிமைகளைப் பெற்றுத் தரக் கூடியதும் எமது உரிமைகளைப் பாதுகாக்க உதவுவதும் நாம் கற்ற கல்வி என்பதை மறந்து விடக்கூடாது. எமது மாணவர்களும் ஜீ.சீ.ஈ. உயர்தரத்தில் கல்வி கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அரசாங்க உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு எமது மாவட்டத்தினதும் மாகாணத்தினதும் நிர்வாகத்தினை அவர்களும் செய்ய வேண்டும்.

ஆகவே படிக்;கின்ற காலங்களில் கோட்டை விட்டு விடாமல் உங்களது படிப்பை நல்ல முறையில் கற்று அரசாங்க உத்தியோகத்தர் பதவிகளை பெற்று எமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

3பி ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் உயர் பீட உறுப்பினர் எம்.ஆர்.எம்.றசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி நகர சபையின் கல்விக்குழுவின் தலைவரும்,நகர சபை உறுப்பினருமான பாக்கீர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா, காத்தான்குடி-3பி ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.எம்.ஆரிப், சேவுத சில்ரன் நிறுவனத்தின் கல்விக்குழு ஆலோசகர் சன்ஸீர் ,வரலாறு பாட ஆசிரியர் ஏ.எல். அப்துல் அஸீஸ் மற்றும் 3பி ஸ்ரீ லங்கா நிறுவன பிரதிநிதிகள்,மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment