கொழும்பு: இலங்கையில் காமன்வெல்த் மகாநாடு தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளில் மாணவர்களும் அரசாங்கத்தினால் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களுடைய கல்வி பாதிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகின்றது. பாடசாலைகளில் இந்த ஆண்டுக்கான வகுப்பேற்ற பரீட்சைகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெறவிருக்கும் நிலையில், பாடசாலைகளில் கற்பித்தல், கற்றல் செயல்பாடுகள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அரசாங்கத்தின் இந்த செயல்பாடுகளினால் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகின்றார்.
பாடசாலைகள் மூடப்படுவதும், பாடசாலை நேரங்களில் கொடிகளை கைகளில் ஏந்தி அசைப்பதற்காக மாணவர்கள் அழைத்து செல்லப்படுவதையும் குறிப்பாக மேல்மாகாணத்தில் காண முடிகின்றது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் 54 நாடுகளின் கலாச்சார நடனங்களை பிரதிபலிக்கும் வகையில் இதற்கான பொறுப்புகள் 54 பாடசாலைகளிடம் கல்வி அமைச்சினால் ஓப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த நாடுகளில் சுவாசிலாந்து நாட்டின் கலாச்சார நடனம் காரணமாக பாடசாலையொன்றின் மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பமடைந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
ஏற்கனவே பல்வேறு நாடுகளில் காமன்வெல்த் மகாநாடு நடைபெற்றுள்ளது. அந்த நாடுகளில் பாடசாலை மாணவர்கள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
– BBC
Leave a comment