சரவணபவான் எம்பியும் சிலரும் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

jaffnaயாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில், இராணுவ உயர் பாதுகாப்புப் பிரதேசத்தின் உள்ளே, பொதுமக்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவதாக முறையிடப்பட்டதை அடுத்து, அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுடன் அங்கு சென்று வீடுகள் உடைக்கப்படுவதைப் படம் பிடித்த ஊடகவியலாளர்களையும் இராணுவத்தினர் அச்சுறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

‘கட்டுவன் வடக்கு பகுதியில் இராணுவ வேலிக்கு வெளியில் நின்று பார்த்தபோது, அங்குள்ள வீடுகளை இராணுவத்தினர் உடைத்துத் தரைமட்டமாக்குவதை நாங்கள் கண்டோம்’ என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்.

‘அந்த வீடுகள் உடைக்கப்படுவதை எம்முடன் வந்திருந்த ஊடகவியலாளர்கள் படம் எடுத்தார்கள். அப்போது அங்கு வந்து, தன்னை பிரிகேட் கமாண்டர் என அறிமுகப்படுத்திக் கொண்ட இராணுவ அதிகாரி ஒருவர் என்னை பாராளுமன்ற உறுப்பினர் என்றும் பாராமல், என்மீதும், என்னுடன் வந்திருந்தவர்கள் மீதும் இராணுவ பலம் பிரயோகிக்கப்படும் என்று அச்சுறுத்தினார்’ என சரவணபவன் தெரிவித்தார்.

‘அந்த இராணுவ அதிகாரியுடன் இராணுவ வேலியைக் கடந்து நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்த ஏழு எட்டு இராணுவத்தினர் படம் பிடித்த ஊடகவியலாளர்களைச் சுற்றி வளைத்து, அவர்களுடைய கமராக்கள், வீடியோ கமராக்கள் என்பவற்றைப் பலவந்தமாகப் பறித்தெடுத்து, எடுக்கப்பட்டிருந்த படங்களை அழித்தார்கள். இது ஜனநாயக விரோதச் செயலாகும்’என்றும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்ட, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, பலாத்காரமாகப் படங்களை அழித்ததாகக் கூறப்படுவதை மறுத்துரைத்தார். இராணுவத்திற்கென வழங்கப்பட்டுள்ள இடத்தில் இடம்பெறுகின்ற அபிவிருத்திச் செயற்பாடுகளைப் படம் பிடிப்பது இராணுவ பாதுகாப்புக்கு எதிரானது எனவே இங்கு படம் பிடிக்க வேண்டாம் என்று எடுத்துக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘எடுத்த படங்களை அழித்துவிடுமாறுதான் கூறப்பட்டது, எடுக்கப்பட்ட படங்களைப் பலாத்காரமாக எவரும் அழிக்கவில்லை. அவ்வாறு கூறுவது பொய்ப்பிரசாரமாகும். இது எங்களுக்குக் கவலையளிக்கின்றது. முன்னர் அந்த இடங்கள் சிவிலியன்களுக்குச் சொந்தமானதாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த இடங்கள் பலாலி இராணுவ முகாமுக்கென இப்போது வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே இராணுவ முகாம் பகுதியில் இடம்பெறுகின்ற வேலைகளைப் படம் எடுப்பதற்கு எவருக்கும் அதிகாரமில்லை’ என்றார் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.

jaffna (2)

BBC

Published by

Leave a comment