காத்தான்குடி: கல்வி கற்கின்ற ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு பாடசாலையாக உருவாக்கப்பட வேண்டும் என மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் மதனி தெரிவித்தார். மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது அதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இஸ்லாமிய அறிவைக் கற்கும் ஒரு பெண் முன்மாதிரிமிக்க பெண்ணாக திகழ வேண்டும்.அப்பொழுதுதான் அப்பெண்ணின் மூலம் ஏனைய பெண்கள் மார்க்கத்தை கற்று விளங்கிக் கொள்ள முடியும்.
மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரியின் பிரதான நோக்கங்களாக முன்மாதிரிமிக்க தாயை உருவாக்குதல்,ஆண்மீகச் சூழலில் சமூகத்தை கட்டியெழுப்பல்,படித்த விடயங்களை மற்ற சகோதரிகளுக்கு எடுத்துரைத்தல்,கற்றுக் கொடுத்தல் என்பன திகழ்கின்றன.
ஆகவே சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணும் முன்மாதிரிமிக்க பெண்ணாக உருவாக்கப்படுகின்ற போது சமூகத்தில் சிறந்த பெண் சமுதாயம் உருவாகும்.
கல்வியைக் கற்கின்ற ஒவ்வொரு பெண்ணும் நல்ல பண்புகளைக் கொண்ட பல பெண்களை உருவாக்கக் கூடிய பாடசாலையாக திகழ வேண்டும்.
சமூகத்தில் பெண்கள் ஓரங்கட்டப்பட்டவர்கள் அல்ல.அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.இதற்காக முதன் முதலில் குரல் கொடுத்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ்,கொழும்புப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ரயிஸுத்தீன் ஷரயி,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அலியார் பலாஹி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Leave a comment