‘இன்றைய மாணவர்கள், எதிர்காலத்தின் மிகப் பெரிய சக்திகள்’ -மட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி

suba sakkara– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: இன்றைய மாணவர்கள் எதிர்காலத்தின் மிகப் பெரிய சக்திகளாகும்.ஆகவே அவர்கள் நல்ல முறையில் வளர்க்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும் ஜீ.ஐ.இஸட் நிறுவனமும் இணைந்து நடாத்தும் ‘சகோதர சங்கம்’ மாணவர் உறவு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்று நாள் வதிவிட செயலமர்வை  மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எதிர்காலம் இன்றைய மாணவர்களின் கைகளில்தான் உள்ளது.அவர்கள் எதிர்காலத்தின் மிகப் பெரிய சக்திகளாக இருப்பதால் அவர்கள் இன,மத,மொழி வேறுபாடின்றி ஒருமித்த சிந்தனையுடன் காணப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு மத்தியில் இன,மத,மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நல்ல மனப்பாங்கு,நல்லெண்ண அலைகள் உருவாக்கப்பட வேண்டும்.இதனூடாக அவர்கள் நட்புறவுடன் வாழ வேண்டும்.

நாம் அனைவரும் இலங்கையர்கள்,ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு மாணவர்களிடத்தில் வளர வேண்டும்.

இலங்கையிலுள்ள மாணவர்கள் சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும்.அப்போதுதான் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மாணவர்களாகிய நீங்கள் ஒருமித்த செயற்பாட்டாளர்களாக மாற முடியும்.

இன்று தமிழ் மொழி பேசும் மாணவர்களுக்கு சிங்கள மொழி பேசும் மாணவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று தெரியாது. சிங்கள மொழி பேசும் மாணவர்களுக்கு தமிழ் மொழி பேசும் மாணவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று தெரியாது. இந்த நிலை மாற வேண்டும்.

எல்லோரும் மும்மொழிகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஒரு மனிதனின் முன்னேற்றம் கல்வியில்தான் தங்கியுள்ளது.ஆகவே மாணவர்களாகிய நீங்கள் உங்கள் கல்வியில் அதி கூடிய கவனம் செலுத்தி நாளை சமூகத்தின் முக்கிய முதுகெலும்புகளாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி மேலும் தெரிவித்தார்.

suba sakkara
மட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி

 

Published by

Leave a comment