கிண்ணியா: கிண்ணியா பிரதேச செயலகமும் நகரசபையும் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர் தின மற்றும் ஹஜ் பெருநாள் சிறப்பு போட்டி நிகழ்ச்சிக்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் லீட்ஸ் நிறுவனமும் அனுசரணையினை வழங்க நிகழ்வு நேற்று மாலை நகரசபை மைதானத்தில் ஆரம்பமானது. நிகழ்வுக்கு விசேட அதிதியாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் கலந்து சிறப்பித்தார்.
நடைபெற்ற வைபவத்தில் சிறுவர்களுக்கான பல போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு பெரியோர்களுக்கான பல போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நேற்று மாலை சிறுவர்கள் பெரியோர்களென ஏராளமானோர் நகரசபை மைதானத்தில் போட்டி நிகழ்ச்சிகளை காண மலையினையும் பொறுற்படுத்தாது திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்கு வலுக்கு மரம் ஏறும் போட்டி எல்லோரையும் கவர்ந்ததோடு அனைவரின் பாராட்டையும் பெற்றது. போட்டிகளின் இறுதியில் நகரபிதாவினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு ஏனைய பிரமுகர்களாலும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வுக்கு நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், பிரதேச செயலாளர் சி.கிரிஸ்ணேந்திரன், ஏடிபி எம்.ஐ.எம். முஜீப், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உலமாசபை தலைவர் ஹிதாயதுள்ளா மௌலவி, இன்னும் முக்கிய உத்தியோகத்தர்களும், பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a comment