‘நேர்மையின் விழுமியங்களை புறக்கணித்ததன் காரணமாகவே முஸ்லிம் அரசியல் இறைவனின் அருளை பெற்றுக் கொள்ள தவறியது.’ – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

???????????????????????????????PMGG ஊடகப் பிரிவு 

‘கடந்த 30 வருடகால முஸ்லிம் அரசியலில் இறைவனின் அருள் இருக்கவில்லை. அதனால்தான் பெரும் பெரும் தேர்தல் வெற்றிகளையும் அதிகாரங்களையும் முஸ்லிம் அரசியல் பெற்றுக்கொண்ட போதிலும் வட கிழக்கு முஸ்லிம்களின் முதன்மையான பிரச்சினைகளுக்குக் கூட இதுவரை தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை’. இவ்வாறு பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

கடந்த 18.10.2013 அன்று காத்தான்குடி குட்வின் சந்தியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் (PMGG) நடாத்தப்பட்ட பொயக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். PMGGயின் பொதுச் செயலாளரும் காத்தான்குடி நகரசபையின் எதிர்கட்சித் தலைவருமாகிய அஷ்ஷெய்க் ALM. சபீல் நழீமியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் PMGG யின் சூறாசபை அமீர் MBM. பிர்தௌஸ் நழீமி, நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் (FJP) தலைவர் முஹம்மட் நஜா, மற்றும் வட மாகாண சபையில் PMGG தலைமை அரசியல் கூட்டமைப்பின் பிரதிநிதியாக அங்கம் வகிக்கும் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் நழீமி ஆகியோரும் உரையாற்றினர்.

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகின்ற போது பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது…

‘முஸ்லிம்களின் உரிமைகளை வென்று தருவதாகவும் அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத்தருவதாகவும் கூறுகின்றவர்கள் தமது அரசியலை கடந்த 30 ஆண்டு காலமாக மிகவும் வெற்றிகரமாகவும் இலாபகரமாகவும் நடாத்தி வருகின்றனர். ஆனாலும், வட கிழக்கு முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் நீண்ட கால மற்றும் நாளாந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் கூட அவர்களால் இதுவரை எதுவித தீர்வையும் காண முடியவில்லை. வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றப் பிரச்சினைகள்இ கிழக்கு மாகாணத்தில் பரவலாகக் காணப்படும் காணிப்பிரச்சினைகள் ஆகியன இதற்கு மிகச் சிறந்த இரண்டு உதாரணங்களாகும்.

பெரும் பெரும் தேர்தல் வெற்றிகளும் அரசியல் அதிகாரங்களும் கைகளில் இருந்தும் கூட நமது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன..? இறைவனின் ‘பறகத்’ என்கின்ற அருள் நமது அரசியலில் இருக்கவில்லை என்பதே காரணமாகும் என்பதை முஸ்லிம்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்வதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்ல முடியும். பெரும் பெரும் பொருளாதார வசதிகளை கொண்ட ஒரு செல்வந்தர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் இருக்கிறது. திருப்திகரமாக சாப்பிடக்கூட முடிவதில்லை. அவரது பிள்ளைகள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சீரழிந்து செல்கிறார்கள். குடும்பத்தில் இன்னும் பல விடயங்களில் நிம்மதியில்லை. மொத்தத்தில் அவர் சேர்த்து வைத்திருக்கும் பொருளாதாரம் அவருக்கான நோயற்ற வாழ்வையோ அல்லது சீரான குழந்தைகளையோ அல்லது நிம்மதியான குடும்ப வாழ்க்கையையோ பெற்றுக் கொடுக்கவில்லை.

அப்படியென்றால் அவரிடத்தில் அத்தனை பொருளாதார வசதிகள் இருந்தும் அவருக்கு இறைவனுடைய அருள் கிட்டவில்லை என்பதுதான் அர்த்தமாகும். இதே நிலைதான் முஸ்லிம் அரசியலிலும் 30 வருட காலமாக நிலவி வருகிறது.
முஸ்லிம் தனித்துவ அரசியல் என்பது பெரும் பெரும் தேர்தல் வெற்றிகளைக் கண்டிருக்கிறது. இந்த நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருக்கிறது. அரசாங்கங்களை மாற்றியமைத்திருக்கிறது. பெரும் பெரும் அமைச்சுப் பதவிகளைக் கொண்டிருக்கிறது.

இறுதியாக கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் கூட அச்சபையின் ஆட்சியைத் தீர்மாணிக்கின்ற பெரும் சக்தியாக மாறியது. இப்படியெல்லாம் இருந்தும் கூட முஸ்லிம்களின் எந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இவர்களால் காண முடிந்தது..?  கிழக்கு மாகாணத்தின் காணிப் பிரச்சினைகளில் ஒன்றுக்காவது இதுவரை தீர்வு காணமுடியவில்லை. வட மாகாண முஸ்லிம்களுக்கு உத்தியோக பூர்வ அகதி அந்தஸ்தைக்கூட பெற்றுக் கொடுக்க முடியவில்லை. முஸ்லிம்களின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றையாவது ஒருமித்த குரலில் பேசும் அளவுக்கு முஸ்லிம் அரசியலை ஒற்றுமைப்படுத்த முடியவில்லை. எனவேதான் முஸ்லிம் அரசியலில் இறைவனின் அருள் இல்லை என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது. இதற்கான காரணம் என்ன..?

நமது 30 வருட கால தனித்துவ அரசியல் வழிமுறைகளை திரும்பிப் பார்க்கின்ற போது இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கக்கூடிய வகையில் அது அமைந்திருக்கவில்லை. தேர்தல் வெற்றிகளையும் தனி நபர் பதவி அதிகாரங்களையும் மாத்திரமே இலக்காகக் கொண்டதனால் முஸ்லிம் சமூகம் கொண்டிருக்க வேண்டிய நேர்மையான விழுமியங்கள் எதனையும் முஸ்லிம் அரசியல் கொண்டிருக்க வில்லை. பொய், ஏமாற்று, சுத்துமாத்து, கழுத்தறுப்பு, வாக்குறுதி மீறல்கள், கள்ளவாக்கு போன்ற சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகள், வன்முறைகள், ஊழல் மோசடிகள் மற்றும் ஏனைய ஹறாமான செயற்பாடுகள் என்பனவே நமது முஸ்லிம் அரசியலில் மூலதனங்களாக இத்தனை காலமும் இருந்து வருகின்றன. இதன் காரணமாகத்தான் தேர்தல்களில் நாம் வெற்றியடைந்தாலும் கூட இறைவனின் அருளை பெற்றுக் கொள்ளும் விடயத்தில்நம்மால் வெற்றிபெற முடியவில்லை.

எனவேதான் இதற்கு தீர்வான மாற்று அரசியல் வழிமுறையினை கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த மண்ணில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தொடக்கி வைத்தது. முஸ்லிம் சமூகம் எவ்வாறான ஒழுக்க தார்மீக பண்பாட்டு விழுமியங்களை கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும் என எமது மார்க்கம் எமக்கு கட்டளையிட்டிருக்கிறதோ அவற்றை முழுமையாக கடைப்பிடிக்கின்ற ஒரு புதிய அரசியல் வழி முறையினை நாம் தொடக்கி வைத்தோம். நீதி, தர்மம், உண்மை, சகோதரத்துவம், மனித நேயம், ஜனநாயகம், வெளிப்படைத் தன்மை, சுய நலம் மற்றும் இனவாதம் கடந்த தேசப்பற்று என்பவற்றை முற்று முழுதாக கடைப்பிடிக்கின்ற அரசியல் வழிமுறையாக அது இருக்கிறது.

இவ்வாறான வழிமுறை ஒன்றின் மூலமாகவே எமது மக்களுக்கான விமோசனத்தினை இறைவனின் அருளுடனும் உதவியுடனும் பெற்றுக் கொடுக்க முடியும் என நாம் நம்புகின்றோம். ஆரம்ப காலங்களில் இவற்றை நாம் முன் வைத்த வேளையில் இவ்வாறான நல்ல விழுமியங்களைக் கொண்ட அரசியல் நடைமுறை சாத்தியமில்லை என்று பலரும் கருதினர். எனினும் இவ்வாறான ஒரு நேர்மையான அரசியல் வழிமுறை மாத்திரமே நமது மக்களுக்கு மாத்திரமின்றி முழு நாட்டினதும் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும் என்ற அடிப்படையில் நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உழைத்தோம். அந்த நேர்மையான உழைப்பிற்கு இறைவனின் அருள் கிடைத்திருக்கிறது என்பதனை வட மாகாணத்தில் நாம் பெற்றிருக்கும் அடைவுகள் நிரூபிக்கின்றன.

காத்தான்குடியில் இரண்டு நகர சபை உறுப்பினர்களையும், கிண்ணியாவில் ஒரு நகர சபை உறுப்பினரையும், கொண்டிருக்கின்ற ஒப்பீட்டளவில் சிறியதான PMGG தலைமை அரசியல் கூட்டமைப்பானது இன்று வட மாகாண முஸ்லிம்களின் இரண்டு தசாப்தகால பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க்ககூடிய நிலைக்கு உயர்ந்திருக்கிறது. வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும், புனர் வாழ்வும் என்பது அங்கு 95 வீதமளவில் பெரும் பாண்மையாக வாழும் தமிழ் மக்களின் ஒத்துழைப்பும் உதவியுமின்றி சாத்தியப்படமுடியாத ஒன்றாகும். தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகளின் உடன்பாடும் உத்தரவாதமும் இதற்கு மிகமிக அவசியமானது.

வட மாகாண முஸ்லிம்களின் அவலங்களை தேர்தல் கால மூலதனமாகப் பயன்படுத்தி அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்ட எவரும் இதனை இதுவரை செய்யவில்லை. கடந்த 23 வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருந்த இந்த அடிப்படைக் கடமையினை இன்று PMGG தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு நிறைவேற்றியிருக்கிறது. அந்த வகையில்தான் தமிழ் மக்களின் அமோக அங்கீகாரத்தைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் வட மாகாண முஸ்லிம்களின் கௌரவமான மீள் குடியேற்ற புனர்வாழ்வு விடயங்களை உத்தரவாதப்படுத்தும் ஒரு வரலாற்று பெறுமதிமிக்க ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வதற்கு எம்மால் முடிந்திருக்கிறது. அதனடிப்படையில் எமது அரசியல் கூட்டமைப்பு சார்பாக முஸ்லிம் பிரதிநிதி ஒருவரும் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது எமது சொந்த கெட்டித்தனம் கிடையாது. எமது நேர்மையான அரசியல் வழிமுறைகளின் காரணமாக கிடைத்த இறைவனின் உதவியினாலும் அருளினாலுமே இது சாத்தியப்பட்டது. இந்த நேர்மையான சமூக அரசியல் வேலைத்திட்டத்தினை மேலும் மேலும் முன் கொண்டு செல்வதற்கும் அதன் மூலமாக முழு நாடும் பயன்பெறக்கூடிய அரசியல் பங்களிப்பை எமது சமூகம் செய்வதற்குமாக நாம் தொடர்ந்தும் உழைக்க வேண்டும். அதற்கதான முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் நீங்கள் வழங்க வேண்டும்.’

Published by

One response to “‘நேர்மையின் விழுமியங்களை புறக்கணித்ததன் காரணமாகவே முஸ்லிம் அரசியல் இறைவனின் அருளை பெற்றுக் கொள்ள தவறியது.’ – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்”

  1. ஊர் மகன் Avatar
    ஊர் மகன்

    முஸ்லிம் அரசியல் இறைவனின் அருளை பெறத்தவரியுள்ளது என்றால் முஸ்லிம்கள் அரசியலில் அருளை பெறத்தவரியுள்ளர்கள் என்பதுதான் அர்த்தம்.ஆக PMGG க்கு வாக்களித்தவர்கள் மட்டுமே இறைவனின் அருளை பெற்றுள்ளார்கள் என்பது உங்களின் வாதம்.
    முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு வாக்களித்தது முஸ்லிம்களே.இவர்கள் செய்தது தவறு இனிமேல் PMGG க்கு மட்டுமே வாக்களியுங்கள். முஸ்லிம் மக்களையோ சமூகத்தையோ
    மடையர்களாக்கி அரசியலில் முதிர்ச்சி பெற்றவர்கள் யாருமில்லை. ஒரு போனஸ் ஆசனத்தை பெற்றுக்கொண்டு ரெம்ப துல்லாதீங்க

    WAIT AND SEE THE GAME MR RAHMAN

Leave a comment