மலாலாவுக்கு கௌரவ குடியுரிமை வழங்க கனடா முடிவு: இங்கிலாந்து எலிசபெத் ராணியும் சந்திக்க அழைப்பு!

malala (2)– MJ

லண்டன்: தனது கொள்கைக்கு எதிரானவர்களை போட்டுத் தள்ளும் தலிபான் இயக்கத்தால் கடந்த வருடம் போட்டுத்தள்ள முற்பட்டு, பின்னர் படு காயங்களுடன் தப்பி, சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்திருக்கும்  மலாலா இன்று உலகில் பேசப்பட்டு வரும் ஒருவர்.

மலாலாவுக்கு கனடாவின் கௌரவ குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.பாகிஸ்தானில் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்த மலாலா யூசப்சாய் என்ற சிறுமி தலிபான்களால் சுடப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது.

தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் பேர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். ஆனாலும், மலாலா கொல்லப்பட வேண்டியவர் என தாலிபன்கள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.இந்நிலையில், மலாலாவுக்கு கௌரவ குடியுரிமை வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இருந்தது. சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது.

malala

இதுதவிர பல்வேறு சர்வதேச கௌவுரவ விருதுகளையும் பெற்றுள்ள மலாலா சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவையும், அவரது மனைவியையும் வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாற்றினார்.

இங்கிலாந்து ராணி எலிசபத்தும் மலாலாவை சந்திக்க அழைப்பு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய உரைகளில், ‘தான் பாகிஸ்தானில் சிறந்த அரசியல்வாதியாக உருவாக வேண்டும், பிரதமராகி அந்நாட்டின் நிலைமையை மாற்ற வேண்டும்’ என பரபரப்பாக பேசி வருகிறார் மலாலா.

இந்நிலையில், மலாலாவுக்கு கௌவுரவ குடியுரிமை வழங்கி சிறப்பிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது வெளியிடப்படும் என தெரிகிறது.

இதற்கு முன்னர், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ரவுல் வேலன் பெர்க், நெல்சன் மண்டேலா, தலாய் லபாமா, ஆங்சான் சூகி, நிசாரி இஸ்மாயிவ் மதகுரு அகா கான் ஆகியோருக்கு கனடா கௌரவ குடியுரிமை வழங்கியுள்ளது. அந்தவகையில் கனடா நாட்டின் கவுரவ குடியுரிமையை பெறும் ஆறாம் நபர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப் பழங்குடியில் கல்வியற்ற ஒதுக்கப்பட்ட சமுதாயமாக வாழ்ந்து வரும் மாணவர்களின் கல்விக்காக போராடி, கல்வியற்ற ஏழைச் சிறுவர்களை கல்வி கற்பதற்கு அவரது சொந்த ஊரில் முயற்சித்து வந்தார். அவரது கல்விச் சேவையின் அயராத முயற்சியால் பாடசாலை என்னவென்றே தெரியாத மாணவர்கள் இன்று பாடசாலைக்குச் சென்று கல்வி கற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

malala (2)

Published by

Leave a comment