சகோதரனுக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் சுரேஸ் எம்.பி: முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

viknesvaranயாழ்ப்பாணம்: பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தனது சகோதரனுக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார் என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், ‘பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்.

இது எல்லா கட்சிகளிலும் ஏற்படக்கூடிய பிரச்சினையே. இதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்று கூறினார்.

‘அரசியலில் பிரவேசிப்பது பணம் சம்பாதிப் பதற்கும் பந்தா காட்டுவதற்கும் என்ற நிலை இனிமேல் மாற வேண்டும். தங்கள் தங்கள் சுயலாபங் களுக்காக மக்களை மீண்டும் கலவரத் துக்குள் தள்ளக் கூடாது’ எனவும் முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பலவற்றால் அடிபட்டு தமது சுய கெளரவத்தை இழந்திருந்த மக்கள் தற்பொழுதுதான் எழுந்து நிற்க பழகிவிட்டார்கள். தொடர்ந்து அவர்கள் ஜனநாயக வழியில் தலைநிமிர்ந்து செல்லும் வாழ்க்கையை வாழ நாங்கள் எங்களால் முடிந்த சகலதையும் செய்வோம்.

பொதுவாழ்க்கையில் எப்போதும் பொதுநலத்துடன் செயற்படவேண்டும் என்பதுடன், எமது உறவுகள் சார்ந்ததாக முடிவுகளை தான்தோன்றித் தனமாக எடுக்ககூடாது. எடுப்பார் கைப்பிள்ளை போல இருக்காமல் தலைநிமிர்ந்து நடக்க பழகிக்கொள்ள வேண்டும்.

தெரிவு செய்யப்பட்ட அமைச்சு பதவிகள் தொடர்பில் உறுப்பினர்கள் யாராவது வந்து கேட்டிருந்தால் அவர்களிற்கு பதில் சொல்லியிருப்பேன். இருப்பினும், அப்படி யாரும் என்னிடம் வந்து கேள்வி எதனையும் கேட்கவில்லை. அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு காரணங்கள் கூறுவதற்கு நான் தயாராக இருந்தேன்’ என்று அவர் மேலும் கூறினார்.

– தினகரன்

Published by

Leave a comment