பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும்

seaடெல்லி: இந்தியாவின் கிழக்கு கடற்கரையை பெரும் புயல் நாளை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒதிஷா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை ‘பைலின்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘பைலின்’ புயல் மிகவும் சக்தி வாயந்ததாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது கரையில இருந்து 450 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த சமயத்தில் வேகமான காற்று வீசும், கடலும் கொந்தளிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மீனவர்களும், சுற்றுலாப் பயணிகளும், கடலுக்கு அருகே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒதிஷா மாநிலத்தின் கன்ஜாம், குர்டா, பூரி, ஜெகத்சிங்பூர் மற்றும் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்கள் புயலால் மோசமாக பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளைச் செய்ய இராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

புயல் காற்றின் வேகம் 240 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என்று அமெரிக்க கடற்படையின் கணிப்பு கூறியுள்ளதால், புயல் குறித்த பீதி அதிகமாகியுள்ளது. ஏற்கனவே பல இடங்களில் கன மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சில கடலோர இடங்களில் 25 சென்டி மீட்டர் வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1999ல் ஒதிஷாவைத் தாக்கிய பெரிய புயல் ஒன்றில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த முறை தாங்கள் மேலதிகத் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

– BBC

Published by

Leave a comment