தாழங்குடா: தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆட்கொல்லி டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக ஆரையம்பதி பிரதேசத்தில் டெங்கு நோய் பரவும் இடங்கள்,சூழல்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் அடையாளம் காணப்பட்டு அது தொடர்பில் விழிப்புணர்வூட்டப்பட்டும் வருவதாக ஆரையம்பதி பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.பஷீர் தெரிவித்தார்.
இதன் ஓர் அங்கமாக கடந்த திங்கட்கிழமை(07) தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரிக்கு விஜயம் செய்த பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் அங்கு பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கு டெங்கு நோய் பரவுவதற்கான சூழல் அடையாளப்படுத்தப்பட்டதையடுத்து அது தொடர்பில் தேசிய கல்வியற்கல்லூரி பீடாதிபதி,உப பீடாதிபதி ஆகியோருடன் கலந்துரையாடி இன்று புதன்கிழமை கல்வியற்கல்லூரியில் பாரியளவிலான சிரமதானப்பணியொன்று ஆரையம்பதி பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.பஷீர் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய கல்வியற்கல்லூரியும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இணைந்து ஏற்பாடு செய்த இச்சிரமதான நிகழ்வில் பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.கிருபாகரன், தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி எஸ். ராஜேந்திரன், உப பீடாதிபதி திருமதி. த. யுவனேஸ்வரி மற்றும் கல்வியற் கல்லூரி 1ம் வருட மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்வியற் கல்லூரி வடிகான்கள்,நீர் தேங்கி நிற்கக் கூடிய இடங்கள்,மாணவர் விடுதி என்பன முழுமையாக துப்பரவு செய்யப்பட்டு கல்லூரி வளாகம் முழுமையாக சிரமதானம் செய்யப்பட்டது.
ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி பாமினி அச்சுதனின் வழிகாட்டலில் ஆரையம்பதி பிரிவில் பாடசாலைகள், வைத்தியசாலைகள், பொது இடங்கள் என்பன பரிசோதிக்கப்பட்டு அது தொடர்பில் பொது மக்களுக்கு டெங்கு நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆரையம்பதி பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ. எம். எம். பஷீர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment