இதுவரை உலகத்தில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் படைக்காத புதிய சாதனையில் சச்சின்!

tendulkar– MJ

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் சாதனைப் புத்தகத்தில் நேற்று மேலும் ஒரு புதிய அத்தியாயம் இடம் பெற்றது. அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் 50,000 ஓட்டங்களை நேற்று முன்தினம்  கடந்தார். இதுவரை உலகத்தில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் படைக்காத புதிய சாதனை இது.

நேற்று முன்தினம் மும்பை இந்தியன்ஸ், டிரினிடாட் டொபாகோ இடையிலான சம்பியன்ஸ் லீக் போட்டியின் போதுதான் இந்த புதிய சாதனையை சச்சின் படைத்தார்

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  போட்டியில் சச்சின் விளையாடத் தொடங்கியபோது,  26 ஓட்டங்களை எடுத்தால் இந்த சாதனையைப் படைக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்த இலக்கையும் தாண்டி அவர் 31 பந்துகளில் 35 ஓட்டங்களைக் குவித்து, 50,000 ஓட்டங்களைக் கடந்தார்.

சச்சின் கிரிக்கெட் நுழைவு 25 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் 50, 000 ஓட்டங்களை அவர் கடந்திருப்பது புதிய வரலாறும் ஆகும்.

டெஸ்ட், ஒரு நாள் போட்டி டுவென்டி 20 என மொத்தம் 953 போட்டிகளில் இதுவரை சச்சின் ஆடியுள்ளார்.

அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 50009 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதில் 307 முதல் தர போட்டிகளில் மட்டும் அவர் குவித்திருப்பது 25, 228 ஓட்டங்களாகும். இந்த முதல் தரப் போட்டிகளில் 198 டெஸ்ட் போட்டிகளும் அடக்கம்.

டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்திருப்பது 15837 ஓட்டங்களாகும்.

551 லிஸ்ட் ஏ போட்டிகளில் அவர் 21, 999 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் 463 ஒரு நாள் போட்டிகளும் அடக்கம்

சச்சின் ஒரு நாள் போட்டிகளில் எடுத்துள்ள ஓட்டங்கள்  18, 426 ஆகும்.

டுவென்டி 20 போட்டிகளில் சச்சின் 2747  ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

விரைவில் சச்சின் இன்னொரு புதிய சாதனையைப் படைக்கவுள்ளார். அது 200வது டெஸ்ட் ஆடிய சாதனை. மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. அப்போது தனது சாதனையை சச்சின் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ‘சச்சினின் முதல் கிரிக்கட் நுழைவு பாகிஸ்தான் அணியுடனேயே ஆரம்பமானது எனவும், எனவே இறுதிப்போட்டியை பாகிஸ்தான் அணியுடன் விளையாட வேண்டும் எனவும், அப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற வேண்டும்’ எனவும் முன்னாள் பாகிஸ்தான் அணியின் தலைவரும், தற்போதய கிரிக்கட் வர்ணணையாளருமான வஸீம் அக்ரம் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment