இஸ்லாமாபாத்: சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் மரண தண்டனையை அமல் படுத்தும் தனது முடிவை நிறுத்தி வைத்துள்ளது பாகிஸ்தான். பாகிஸ்தான் சிறைகளில் சுமார் 8 ஆயிரம் பேர் மரண தண்டனை கைதிகளாக பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து உத்தரவு ஒன்று அமல்படுத்தப்பட்டது. அந்த உத்தரவு கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதியுடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அரசு, கிரிமினல்களையும், தீவிரவாதிகளையும் ஒழித்துக்கட்ட மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தது.
ஆனால், அதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எனவே, மரண தண்டனையை அமல்படுத்தும் தனது முடிவை பாகிஸ்தான் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
நேற்று, இதனை அதிகாரப்பூர்வமாக அந்நாட்டின் உள்துறை செய்தித்தொடர்பாளர் உமர் ஹமீதுகான் அறிவித்தார்.

Leave a comment