சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருவில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் எதிர்வரும் அக்டோபர் 30 அன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முடிகவுடர் இன்று வியாழன் உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருப்பதால் பணி நிமித்தமாக நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் எனக்கோரப்பட்டது.
ஆனால் நீதிபதி முடிகவுடர் இம் முறை மட்டும் மனுவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததுடன், இனிமேல் வழக்கு விசாரணைக்கு வரும் ஒவ்வொரு முறையும் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை அடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக முடிகவுடர் பொறுப்பேற்றுள்ளார்.
வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தினை நெருங்கியுள்ள நிலையில் பாலகிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு அளித்து அவரே வழக்கைத் தொடர்ந்து விசாரிக்கவேண்டும் எனக்கோரி ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக மாநில அரசு அது குறித்து உரிய முடிவெடுக்கட்டும் என்று மட்டும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.’
ஆனால் புதிய நீதிபதி எவரேனும் நியமிக்கப்படுவாரா அல்லது பாலகிருஷ்ணா மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவாரா என்பது தெளிவுபடுத்தப்படாத நிலையில் முடிகவுடர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கிறார்.
– BBC
Leave a comment