யாழ்ப்பாணம்: வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறிக்கும் இடையில் இன்று காலை 10.00 மணிக்கு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சி.வி. விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கான நியமனக்கடிதத்தையூம் ஆளுநர் சந்திசிறி இச்சந்திப்பின் போது கையளித்தார்.
மாகாண சபை சட்டவிதிகளின் படி ஆளுநர் முன்னிலையிலேயே முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும் என்பதையும் இங்கு ஆளுநர் வலியுறுத்தினார்.
அமைச்சுப் பொறுப்புகள் மற்றும் பதவிப் பிரமாணம் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த விசேட சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இந்த சந்திப்பு மிகவும் சுமுகமான முறையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் இடம்பெற்றதாகவும் தெரிய வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இந்த விசேட சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
முதலமைச்சருக்கான நியமனக்கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மேலும் சில தினங்களில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்வார் எனவும் தெரிய வருகிறது.
வட மாகாண தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட விக்னேஸ்வரன் ஒரு லட்சத்து 32ஆயிரத்து 255 விருப்பு வாக்குகளைப் பெற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
![Letter%20Hand%20Over[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/letter20hand20over1.jpg?w=780&h=520)
Leave a comment