நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி அதிபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு

n1[1]நீர்கொழும்பு:  சென். மேரிஸ் கல்லூரி அதிபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்டெடு க்கப்பட்டுள்ளார். கல்லூரி வளாகத்தில் நேற்றுக் காலை 7.30 – 7.50 மணிக்கு இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிபரின் காரியாலயத்திற்கு அருகிலுள்ள குளியலறை யிலிருந்து இவர் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்றுக் காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீர்கொழும்பு பிரதேசத்தி லுள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான சென் மேரிஸ் கல்லூரியின் அதிபரான நீர்கொழும்பு, தளுபொத பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய மெக்சல் டொனால்ட் பெர்னாண்டோ என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வழக்கம் போன்று நேற்றுக் காலை பாடசாலைக்கு வந்த பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அதிபர் அலுவலகத்தில் இல்லாததை அடுத்து தேடியுள்ளனர். இதன் போது, அலுவலகத்திற்கு அருகிலுள்ள குளியலறை மூடியிருந்துள்ளதை அடுத்து, அதனை திறந்து பார்த்துள்ளனர். அங்கு அதிபர் வெட்டுக் காயங்களுடன் இரத்தம் தோய்ந்த நிலையில் விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.

அதிபரது கழுத்து மற்றும் காலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்ட நிலையில் உடனடியாக மீட்டெடுக்கப்பட்ட அவர், அருகிலுள்ள நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அதிபர் உயிரிழந்துள்ளார் என்று டொக்டர்கள் உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மர்மமான முறையில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் அந்தப் பிரதேசம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி கல்லூரி அதிபர் வெட்டுக்காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்ட போதிலும், இது மர்மமான முறையில் இடம்பெற்ற கொலைச் சம்பவமா அல்லது தற்கொலைச் சம்பவமா? என்பது உறுதி செய்யப்படாத நிலையில், விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

அதிபர் உயிரிழந்து கிடந்த இடத்திலிருந்த சில தடயங்களும், தோய்ந்திருந்த இரத்த மாதிரிகளும் விசாரணைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கொலையா? தற்கொலையா என்பது தொடர் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த அதிபர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார், இவர் அடுத்த மாதம் பதவியிலிருந்து ஓய்வுபெற இருந்தாரெனத் தெரிய வருகிறது.

சம்பவம் இடம்பெற்ற கல்லூரியின் பிரதேசத்துக்கு நீதிமன்ற விசாரணைக்காக நீர்கொழும்பு மாவட்ட நீதவான் துலானி எஸ். வீரதுங்க சமுகமளித்தார்.

அதிபரின் சடலம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. நீர்கொழும்பு மாவட்ட பிரேத பரிசோதகர் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் ஏ. தனபால இரத்த நாளங்கள் வெட்டப்பட்டதனால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களில் அதிகக் குருதிப் பெருக்கம் ஏற்பட்டு குருதி பெருக்கெடுத்து ஓடியதனால் மரணம் சம்பவித்துள்ளது என வைத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளார். இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

– தினகரன்

Published by

Leave a comment