லண்டன்: இலவசமாக மாணவர்களுக்கு கல்வியை வழங்க பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் முன்வந்துள்ளன. இணையத்தளம் மூலமாக இலவச கல்வியை மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம். இம்மாதம் 18ம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த கல்விமுறை எதிர்கால கற்றல் என்றழைக்கப்படுகிறது.
இதுகுறித்து பிரிட்டன் கல்வி அமைச்சர் டேவிட் வில்லிடிஸ் கூறுகையில், இப்புதிய கல்வித் திட்டத்தின் மூலம் அடிப்படை கல்வியில் ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்படும்.
இத்திட்டத்தை பிரிட்டனின் டப்ளின் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகங்கள் உட்பட 21 பல்கலைக் கழகங்கள் வழங்க முன்வந்துள்ளன.
இணையத்திலேயே கிடைக்கும் இந்த பாடத்திட்டங்களை பர்மிங்காம், நாட்டிங்காம், வார்விக், பிரிஸ்டல் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் தயாரித்துள்ளன.
பிரிட்டிஷ் நூலகம், பிரிட்டிஷ் அருங்காட்சியகம், பிரிட்டிஷ் கவுன்சில் போன்றவற்றில் இருந்தும் மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதில் 20 விதமான குறுகிய பாடத்திட்டங்கள் இடம் பெற்றுள்ளன, இதில் 8 திட்டங்கள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படுகின்றன.
இருப்பினும் இதில் சேர்ந்த பயிலும் மாணவர்களுக்கு சோதனை ரீதியாக பல்வேறு வினாக்கள் கேட்கப்படும்.
இதற்கு எவ்விதமான முன் கல்வித்தகுதியும் தேவையில்லை. இந்த கல்வியை பெறும் மாணவர்களுக்கு எவ்விதமான சான்றிதழ்களும் அளிக்கப்படமாட்டாது.
இருப்பினும் பல்கலைக்கழகங்களில் படித்த அனுபவமும், அறிவும் மாணவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இணையதள கல்வியில் தற்போது முன்னிலையில் உள்ள அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். LS
Leave a comment