கொழும்பு: நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சராசரியாக 68 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது மக்களுக்கு உள்ள ஜனநாயகத்தின் மீதான விருப்பத்தை உறுதி செய்வதாக அமைகிறதென ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஐந்து வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளினாலும் நிலக்கண்ணி வெடியினாலும் நிர்வகிக்கப்பட்டு வந்த வடபகுதி மக்கள் தேர்தல் என்கின்ற ஜனநாயகத்தின் பங்காளிகளாக முதல் முறையாக நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய வீதத்தில் வாக்களித்திருப்பதை ஜனநாயகத்தை மதிக்கின்ற சகல மக்களினதும் பாராட்டுக்களைப் பெற வேண்டும்.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் வடபகுதி மக்களின் சமூக, பொருளாதார மற்றும் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான இலங்கை அரசின் மூலம் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் தோல்வியடையச் செய்ய பல்வேறு சக்திகள் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் முயற்சிகளை மேற்கொண்டன.
தற்போது நடந்து முடிந்த மாகாண சபை தேர்தலில் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சராசரியாக 68 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது மக்களுக்கு உள்ள ஜனநாயகத்தின் மீதான விருப்பத்தை உறுதி செய்வதாக அமைகிறது. நிலக்கண்ணி வெடிகளால் விதைக்கப்பட்டிருந்த ஒரு பிரதேசமாக இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் 70 வீத வாக்குகள் பதிவாகியிருப்பதை விசேடமாக கருதலாம்.
முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கடந்த முப்பது வருட காலமாக பயங்கரவாதிகளால் அடிமையாக்கப்பட்டு அவர்களது காட்டு தர்பார்கள் சட்டத்திற்கு அடிமைகளாக கிடந்தன. இந்த நிலைமைக்கு எதிராக குரல் எழுப்புவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அன்று முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அது மட்டுமல்ல இன்றும் அதேபோன்று ஜனநாயக விரோத நிலைமை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது வருத்தத்திற்குரிய விடயமாகும்.
அந்தப் பகுதிகளில் இருக்கின்ற அதிகாரிகள் கூட ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் ஆகினர். இவ்வாறான நிலைமையில் இருந்த முல்லைத்தீவு பிரதேசத்தை ஜனநாயக வழிமுறைக்கு கொண்டு வருவதற்கு முடிந்தமை நாட்டு மக்களுக்கே கிடைத்த வெற்றியாகும். பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த கிழக்கு திமோர், ஆப்கானிஸ்தான், ஈராக், எகிப்து போன்ற நாடுகள் ஐ.நா.வின் தலையீட்டின் ஊடாக தேர்தல்கள் நடத்தி இருந்தாலும் அந்த நாடுகளில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொண்ட முயற்சிகள் போன்று அந்த நாடுகளில் வெற்றியளிக்க வில்லை.
சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கு அந்த நாடுகளால் முடியாமல் போனது. அது மட்டுமல்ல அந்த நாட்டின் மக்களின் பங்களிப்பைக் கூட பெற முடியாது போனது. உதாரணமாக 2010 ஆம் ஆண்டு ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தேர்தலை குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்த தேர்தலில் 36 சதவீதமான வாக்குகளே பதிவாகியிருந்தன.
ஆப்கானிஸ்தானின் தேர்தலின் போது ஆகக் குறைந்தது 50 வீத வாக்குகள் பதிவானால் அந்த தேர்தல் வெற்றிகரமானது என்று ஐ.நா. தேர்தலுக்கு முன்னரே அறிவித்திருந்தது. ஆனால் அந்த இலக்கை கூட ஐ.நா.வால் அடைய முடியாமல் போனது. வடக்கில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எடுத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மானத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைத்த அதற்கான சூழலை உருவாக்கித்தந்த பொலிஸாருக்கும், முப்படையினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ஜனநாயகத்தை இயங்க வைப்பதற்கும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பை வழங்கிய வாக்காளர் அனைவருக்கும் விசேட நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
– தினகரன்
Leave a comment