யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருடைய வீடு வாக்களிப்பு தினத்திற்று முந்திய நாளான வெள்ளியன்று அதிகாலை தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து, பதட்டம் நிலவியபோதிலும், இன்று சனிக்கிழமை காலை 7 மணிமுதல் அமைதியான முறையில் விறுவிறுப்பான வாக்களிப்பு நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை காலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்காளர்களின் வருகை குறைவாக இருந்த போதிலும் காலை பத்து மணிக்குப் பின்னர், வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்றதைக் காணக் கூடியதாக இருந்தது. யாழ்ப்பாணத்தின் முஸ்லிம் பகுதிகளிலும் வாக்களிப்பு அமைதியாகவும், சுறுசுறுப்பாகவும் இடம்பெற்றதைக் காண முடிந்தது.
வவுனியா, மன்னார், கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் வாக்களிப்பு அமைதியாக நடைபெற்றது. குறிப்பிடத்தக்க வகையில் சம்பவங்களோ அசம்பாவிதங்களோ இடம்பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் வவுனியா மாவடடம் நெடுங்கேணி சின்னடம்பன் பகுதியில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவருடைய துப்பாக்கித் தவறுதலாக வெடித்தபோது, குண்டு மரத்தில் பாய்ந்து சிதறியதையடுத்து சிறுமியொருவர் சிறுகாயத்தற்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்பட்டது.
வவுனியாவில் நண்பகலுக்குச் சற்றுப் பின்னர் வரையில் 53 வீதமும், மன்னாரில் 60 வீதமும், முல்லைத்தீவில் 50 வீதமும் கிளிநொச்சியில் 55 வீதமம் யாழ்மாவட்டத்தில் 40 வீதமும் வாக்களிப்பு இடம்பெற்றிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா இரணை இலுப்பைக்குளம் பகுதியில் வாக்காளர்களுக்கான போக்குவரத்து வசதியில்லாததால் வாக்காளர்களை பஸ் வண்டிகளில் ஏற்றச் சென்றதாகக் கூறப்படும் சமப்வத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரணி பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாகத் தகவல் வந்துள்ள போதிலும் அதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.
-BBC
Leave a comment