அனந்தி சசிதரன் அரசாங்க கட்சிக்கு மாறிவிட்டதாக போலிப் பிரசாரம்! மக்கள் குழப்பமடைய வேண்டாம் என அனந்தி அறிவிப்பு

uthayan_paper_001[1]யாழ்ப்பாணம்: தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரன் அரசாங்க கட்சிக்கு மாறிவிட்டதாக தலைப்புச் செய்தியுடன் போலி உதயன் பத்திரிகை இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் எனவும்,  மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அனந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது,

இன்றைய தினம் அதிகாலை 3மணியளவில் உதயன் பத்திரிகையினைப் போன்றே மிகவும் போலியாக பதிப்பிக்கப்பட்ட பத்திரிகைகள் யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன.

அந்த பத்திரிகையில் உதயன் பத்திரிகையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் வர்த்தக நிலையத்தினர் அவற்றைப் பெற்றுள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு ஒருவாறாக விடயம் விளங்கிய நிலையில், அதிகாலை 3.30 மணிக்கெல்லாம், உதயன் அலுவலகத்திற்கு விடயம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உதயன் பணியாளர்கள் விரைந்து அந்த போலிப் பத்திரிகைகளை குறித்த வர்த்தக நிலையங்களிலிருந்து முழுமையாக அகற்றியுள்ளனர்.

குறித்த பத்திரிகையில் நேற்று அதிகாலை அனந்தி வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்தும், எழிலன் இனந்தெரியாத நபர்களினால் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்தும் உடனடியாக அவர் அரசாங்க கட்சிக்கு மாறியுள்ளதாக தலைப்பு செய்தி போடப்பட்டுள்ளது.

எனினும் தற்போது பாதுகாப்பான இடம் ஒன்றில் தங்கியிருக்கும் அனந்தி, அதனை முழுமையாக மறுத்துள்ளதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பதாகவும், இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என்றும் மக்களிடம் கேட்குமாறு அவர் ஊடகங்களிடம் கேட்டுள்ளார்.

இதுவே எங்கள் பத்திரிகையின் தலைப்பு மக்கள் குழப்பம் கொள்ள வேண்டாம்!-  உதயன் நிர்வாகம் 

உரிமையா சலுகையா, வரலாற்று முடிவு இன்று தமிழர் எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் இன்றைய நாளில் அனைவரும் எழுச்சி கொள்வோம். என்ற தலைப்புடனேயே இன்றைய உதயன் நாளிதழ் வெளிவந்துள்ளது என்பதை தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தேர்தல் தினமான இன்று உதயன் பத்திரிகையின் பிந்திய பதிப்பு என அச்சிடப்பட்டு விசமிகளால் முக்கிய இடங்களில்  பத்திரிகை விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

அதில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்திகளுக்கும் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதனை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாக்களிப்பு தொடர்பில் மக்களை குழப்புவதற்கே இந்த நாசகார வேலை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனந்தி சசிதரன் தேர்தலிலிருந்து விலகியதாக அரச சார்பு ஊடகத்தின் விஷமப் பரப்புரை 

வட மாகாணசபைத் தேர்தலில் இலக்கம் 1இல் போட்டியிடும் அனந்தி சசிதரன் ஆகிய நான் தேர்தலில் இருந்து விலகிவிட்டேன் என்ற போலியான செய்தியை  யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளிவரும் உதயன் பத்திரிகை விசேட பதிப்பு மூலம் வெளியிட்டதாக அரச சார்புத் தொலைக்காட்சியான டான் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருகிறது.

இது முற்று முழுதான பொய்ப்பிரசாரம். நான் ஏற்கனவே தெரிவித்தது போல, இத்தைகைய பொய்யான செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களைக் குழப்பி என்னை மக்களிடமிருந்து ஓரங்கட்டுவதற்காகவும் எனது விருப்பு வாக்குகளைச் சிதறடிப்பதற்காகவும் அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கையே இதுவாகும்.

நான் தேர்தலிலிருந்து விலகவில்லை. விலக மாட்டேன். ஆகவே தயவு செய்து எம்மக்களாகிய நீங்கள் இத்தைகைய பொய்ப்பிரசாரங்களுக்கு செவி சாய்க்கவேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்வதுடன் தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன் என அனந்தி தெரிவித்துள்ளார். TW

uthayan_paper_001[1]

 

Published by

Leave a comment