வடமாகாணசபை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

northயாழ்: இலங்கையின் வடக்கே 25 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 488 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள். மொத்தமாக 36 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார்கள்.

வடமாகாண சபையில் அதிகூடிய வாக்குகளைப் பெறுகின்ற ஒரு கட்சி 2 ஆசனங்களை போனசாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் பெற்றிருக்கின்றது. இதனால் தேர்தல் முடிந்ததும் 38 உறுப்பினர்களுடன் வடமாகாண சபை செயற்படத் தொடங்கும்.

வவுனியா மாவட்டத்தில் 94 ஆயிரத்து 367 வாக்காளர்கள் 6 உறுப்பினர்களைத் தெரிவு செய்வார்கள். மன்னார் மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 420. உறுப்பினர்களின் எண்ணிக்கை 5. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 52 ஆயிரத்து 409 வாக்காளர்கள் 5 உறுப்பினர்களைத் தெரிவு செய்வார்கள். கிளிநொச்சி மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 589. உறுப்பினர்கள் எண்ணிக்கை 4. யாழ் மாவட்டத்தில் 16 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 4 இலட்சத்து 26 ஆயிரத்து 793 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

களத்தில் பலகட்சிகள்; போட்டியோ இரு அணிகளுக்கிடையில்

இந்தத் தேர்தலில் இரு முனைப்போட்டியே முனைப்பு பெற்றிருப்பதாக பார்ப்படுகிறது. ஆளும் கூட்டணியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலேயே கடும் போட்டி நிலவுகின்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில், முக்கிய தமிழ்க்கட்சியான ஈபிடிபி கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கின்றது.

வடமாகாண தேர்தல் பணிக்குச் செல்லும் அதிகாரி

வடமாகாண தேர்தல் பணிக்குச் செல்லும் அதிகாரி

எதிர்த்தரப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் வீட்டுச் சின்னத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எப், டெலோ, புளொட், தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய கட்சிகள் களத்தில் குதித்திருக்கின்றன.

அரசாங்கத்துடன் அரசியல் பங்காளியாக உள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சியும் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. ஜேவிபியும், இடதுசாரி கட்சிகளும், சில உதிரிக் கட்சிகளும், பல சுயேச்சை குழுக்களும் தேர்தல் களத்தில் இருக்கின்றன.

அனைத்து ஏற்பாடுகளும் தயார்

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும். வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப் பெட்டிகள் சகிதம் அலுவலகர்கள் வெள்ளியன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை, யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளும் தீவிரமடைந்திருப்பதாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரேயொரு பெண் வேட்பாளராகிய அனந்தி சசிதரனின் வீடு வியாழனன்று இரவு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றது.

இந்தத் தாக்குதலை பலதரப்பினரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். திருமதி அனந்தி எழிலன் அவர்கள் காணாமற் போன உறவுகளை மீட்பதில் அவர்களுக்காக போராடுவதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் இத்தகைய செயற்பாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரின் மனைவி என்பதுமே இவர் குறிப்பாக இலக்கு வைக்கப்படக் காரணமாகும் என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இத்தாக்குதல வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதேவேளை, தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் என்ற பெயரில் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.

நகரின் பல இடங்களிலும் இடம்பெற்ற இந்த துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு இராணுவத்தினர் பின்னணியில் பாதுகாப்பு வழங்கியதாக அவர்களின் எதிர்தரப்பின் சார்பில் புகார் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்களிப்பு இடம்பெறவுள்ள பின்னணியில், அச்சமும் குழப்பமும் கலந்த ஒரு சூழ்நிலையே யாழ்ப்பாணத் தேர்தல் களத்தில் காணப்படுகின்றது.

– BBc

Published by

Leave a comment