யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளராகிய அனந்தி சசிதரனுடைய வீட்டில் வியாழனன்று நள்ளிரவு ஆயுதமேந்திய குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ நேரம் அனந்தி வீட்டில் இருக்கவில்லை. இதனால் அவர் ஆபத்திலிருந்து தப்பியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
சீருடையிலும், சிவிலுடையிலும் வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவருடைய வீட்டைச் சுற்றி வளைத்து முதலில் அனந்தி இருக்கின்றாரா என கேட்டு கூச்சலிட்டதாகவும், பின்னர் கதவுகளை உடைக்க முற்பட்டபோது வீட்டிலிருந்தவர்கள் கதவைத் திறந்ததையடுத்து உள்ளே நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அனந்தியின் தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும், அவரின் உதவியாளராகிய பெண் ஒருவருமே அந்த நேரத்தில் வீட்டிலிருந்துள்ளார்கள்.
அனந்தியின் வீடு தாக்கப்படுவது தொடர்பாக அறிந்த பவ்ரல் எனப்படும் உள்ளுர் தேர்தல் கண்காணிப்பு குழுவைச் செர்ந்த சட்டத்தரணி சுபாஸ் என்பவர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அவரும் தாக்குதலுக்கு உள்ளாக்யிருக்கின்றார். தான் யார் என்று அடையாளப்படுத்திய பின்னரும் அவர்கள் தம்மைத் தாக்கியதாக அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோர் சென்று நிலைமைகளை அவதானித்ததுடன் காயமடைந்தவர்களை பாதுகாப்பாக யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
பத்துபேர் அனுமதி; இருவருக்கு மோசமான முறிவு காயங்கள்
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பத்துப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக யாழ் மாவட்ட பதில் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் தெரிவித்தார். பத்துப் பேரில் இருவருடைய நிலைமைகள் மோசமாக இருந்ததாகவும் முறிவு காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர் கூறினார். வைத்தியசாலையில் தமக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி அவர்கள் வைத்திய ஆலோசனைக்கு எதிராக இன்று நண்பகல் வீடுகளுக்குச் சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பபதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரியிருப்பதாகவும் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
மாகாண சபைக்கான வாக்களிப்பு நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் யாழ் குடாநாட்டில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஒருவிதமான அச்ச உணர்வையும் தோற்றுவித்திருக்கிறது.
அமெரிக்கா கவலை
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனது கவலையை வெளியிட்டிருக்கும் இலங்கையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான, வெளிப்படையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இதில் ஈடுபட்டவர்கள் விரைவாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.
தேர்தலில் போட்டியிடும் அனைத்து தரப்பாரும், வன்முறையில் ஈடுபடாமல் அமைதியான, வெளிப்படைத்தன்மை மிக்க நியாயமான தேர்தல் நடக்க ஒத்துழைப்பதன் மூலம், வாக்காளர்கள் தமக்குப் பிடித்த வேட்பாளர்களை பயமின்றி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்க வழி செய்யுமாறும் அமெரிக்கத் தூதரகம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
BBC
Leave a comment