நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அவரைப் பதவி நீக்க வேண்டாம் என அலியார் மௌலவி பகீரதப் பிரயத்தனம்!!
‘என்னை ஒரு உலமாவாக நீங்கள் கணக்கெடுக்கவில்லையே?’ என்ற மனப் பொருமலுடன் அவர் மெத்தைப்பள்ளியிலிருந்து வெளியேற்றம்!!!
காத்தான்குடி முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலின் தலைவர் பதவியிலிருந்து காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகிய நிறுவனங்களின் முன்னாள் தலைவருமான மர்சூக் அகமட்லெப்பை பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
நேற்று 17ம் திகதி இஷாத் தொழுகைக்குப் பின்னர் கூடிய இப்பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் பன்னிருவர், தலைவராக இருந்த மர்சூக் அகமட்லெப்பையையும், செயலாளராக இருந்த ஏ.எம். றபீக் ஆசிரியரையும் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றின் மூலம் பதவி நீக்கம் செய்தனர்.
முன்னதாக கடந்த 03ம் திகதி இவ்விருவர் மீதும் இப்பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் 14 பேர் கையெழுத்திட்டு பதினொரு பாரிய மோசடிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமாப்பித்திருந்தனர்.
அதனைக் கவனத்திற்கெடுக்காது கடந்த 15ம் திகதி புதிய நிர்வாக சபைத் தெரிவு நடைபெறுமென்றும், அதன்போது புதிய நிர்வாகிகள் ஜமாஅத்தார்களால் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் இவர்கள் அறிவித்திருந்தனர்.
அவ்வாறு நடைபெறும் புதிய நிர்வாக சபைத் தெரிவின்போது இவ்விருவருமே மீண்டும் தலைவராகவும், செயலாளராகவும் தெரிவு செய்யப்படுவதற்கு ஏதுவாக மோசடியான வகையில் ஜமாஅத்தார் பட்டியலொன்றையும் இவர்கள் தயாரித்து பள்ளிவாசலில் காட்சிப்படுத்தியிருந்ததுடன் அதனை வக்பு சபைக்கும் அங்கீகாரம் பெறுவதற்காக அனுப்பி இருந்தனர்.
எனினும் இப்பள்ளிவாசல் நிர்வாகிகளும், ஜமாஅத்தார்களும் வக்பு சபைக்குச் செய்திருந்த முறையீடுகளைத் தொடர்ந்து இப்புதிய நிர்வாகத் தெரிவு குறித்து ஆராய்ந்த வக்பு சபை அதிகாரிகள், ஏற்கனவே இவர்களால் அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தவாறு 15ம் திகதியன்று புதிய நிர்வாக சபைத் தெரிவை நடாத்தக் கூடாது எனப் பணிப்புரை விடுத்திருந்தனர்.
இதனால் சோர்ந்து துவண்டுபோன மர்சூக் அகமட்லெப்பை ஊரிலுள்ள பெரிய மனிதர்கள் பலரின் உதவியை நாடி எவ்வழியிலேனும் இப்பதவியில் நீடித்திருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த அதேவேளையில், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் ஏற்கனவே கையளிக்கப்பட்ட இவர்கள் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க நிர்வாக சபையைக் கூட்டுமாறு செயலாளருக்கு அழுத்தமும் கொடுத்து வந்தனர்.
இதற்கமைய நேற்று 17ம் திகதி செவ்வாய்க்கிழமை இஷாத் தொழுகையைத் தொடர்ந்து நம்பிக்கையாளர் சபை கூடியது. இக்கூட்டத்திற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பாரிய குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்த தலைவர் மர்சூக் அகமட்லெப்பையும், செயலாளர் றபீக் மாஸ்டரும் சமூகம் அளிக்கவில்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணைப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்த எம.ஏ. றபீக் ஹாஜியார் தான் கொழும்பில் இருப்பதாகத் தெரிவித்தார். முன்னாள் பிரதேச சபைப் பணியாளர் சீ.எம். அபுல்ஹஸன் ஹாஜியாரும் இக்கூட்டத்திற்குச் சமூகமளிக்கவில்லை.
ஏனைய 12 உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர். இதன்போது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் அலியார் மௌலவி பள்ளிவாசலுக்குச் சமூகமளித்தார். அவர் அங்கிருந்த நம்பிக்கையாளர்களிடம், மர்சூக் அகமட்லெப்பையை நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்ய வேண்டாம். நான் அவரை இன்னும் இரண்டு தினங்களில் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வைக்கின்றேன். தயவுசெய்து இக்கூட்டத்தை ஒத்தி வையுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
அவரது இந்த வேண்டுகோளுக்கு நிர்வாகிகள் செவிசாய்க்கவில்லை. சுமார் 1½ மணித்தியாலங்களாக அலியார் மௌலவிக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்ததாக பள்ளிவாசல் வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலகள்; தெரிவித்தன.
இறுதியில் அவரின் முன்னிலையிலேயே மர்சூக் அகமட் லெப்பை மற்றும் றபீக் மாஸ்டர் ஆகியோர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும், இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கச் செயலாளருமான கே.எம்.எம். அலியார் ஜே.பி முன்மொழிந்தார். அதனை நம்பிக்கையாளர் சபை உறுப்பினரான மௌலவி எம்.ஐ.எம். றகீப் (பலாஹி) வழிமொழிந்தார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நம்பிக்கையாளர்களே கூட்டத்தில் அறுதிப் பெரும்பான்மையினராக இருந்ததாலும், அக்குற்றச் சாட்டுக்களை எதிர்த்து வாதாட சபையில் எவரும் முன்வராதமையினாலும் அப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் ‘நானே ராஜா, நானே மந்திரி’ என்ற மமதையுடன், அகந்தையுடன், ஆணவத்துடன் இப்பள்ளிவாசல் வளாகத்தில் வலம் வந்து கொண்டிருந்த இவ்விருவரும் இன்று இப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களாலேயே நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள்:
1. காத்தான்குடி நகர சபையின் தற்போதைய தவிசாளரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி பள்ளிவாசல் நிர்வாக சபைத் தீர்மானமில்லாமல் பள்ளிவாசலின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி இவ்விருவரும் தன்னிச்சையாகச் செயற்பட்டு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கோரிக்கை முன்வைத்தமை.
2. காத்தான்குடி குட்வின் சந்தியில் அமைந்துள்ள இப்பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைத்தொகுதி உடைக்கப்பட்டபோது, அதுசம்பந்தமாக சுமூகமான பேச்சுவார்த்தை நடாத்த முன்வருமாறு சம்மேளனம் அழைத்திருந்தும் ஒரு தலைப்பட்சமாக அந்தப் பேச்சுவார்த்தையை நிராகரித்ததன் மூலம் அது தொடர்பான வழக்குச் செலவாக பள்ளிவாசல் பணமான பல இலட்சம் ரூபாய்களைச் செலவிட்டது.
3. இதுவரை மேற்படி கடைத் தொகுதி உடைப்பு தொடர்பான வழக்கிற்காகச் செலவு செய்யப்பட்ட தொகை சம்பந்தமாக எவ்விதமான செலவறிக்கைகளையும் இவர்கள் சமர்ப்பிக்கத் தவறியமை.
4. பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தீர்மானம் எதுவும் இன்றி, மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் கட்டிடத் திருத்த வேலைக்காக பள்ளிவாசல் பணம் 2½ இலட்சம் ரூபாவைச் செலவிட்டமை.
5. இப்பள்ளிவாசலின் புதிய நம்பிக்கையாளர் தெரிவு சம்பந்தமாக நம்பிக்கையாளர் சபையின் எவ்விதத் தீர்மானமும் இன்றி 15.09.2013ம் திகதியில் ஜமாஅத்தார் பொதுக் கூட்டம் கூட்டப்படுவதாக வக்பு சபைக்கும், ஜமாஅத்தார்களுக்கும் அறிவித்தமை.
6. புனித லைலத்துல் கத்ர் இரவில் பள்ளிவாசல் சார்பாக செயலாளர் ஏ.எம். றபீக் உரையாற்றுவதாக நிர்வாக சபையினர் தீர்மானித்திருந்தும், அதற்கு மாற்றமாக தன்னிச்சையாக தலைவர் உரையாற்றி பள்ளிவாசலில் பெரும் குழப்பம் ஏற்பட வழிவகுத்தமை.
7. புனித றமழான் நோன்பு காலத்தில் ஓதப்பட்டு வந்த ஹிஸ்பு மஜ்லிஸ், கடந்த 19.08.2013ம் திகதி நம்பிக்கையாளர் சபையின் எவ்விதத் தீர்மானமும் இன்றி தமாம் செய்யப்பட்டு 3600 ரூபா பள்ளிவாசல் நிதியினைச் செலவு செய்தமை.
8. முறையான அழைப்பிதழ்கள் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு கூட்டங்கள் முறையாக கூட்டப்படாமை. கோரமின்றி கூட்டங்களை நடாத்தி தீர்மா னங்கள் உடனுக்குடன் எழுதப்படாமல் பின்னர் இவர்களுக்கு ஏற்றவாறு தீர்மானங்களை எழுதிச் செயற்படுத்துகின்றமை.
9. பள்ளிவாசலால் வழங்கப்படும் 400/= மஹ்மூன் பணத்திற்கு பற்றுச் சீட்டு வழங்கப்படும்போதும், மஹல்லா அட்டைகள் வழங்கப்படும்போதும் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர் அல்லாத முகாமையாளரைக் கொண்டே கையெழுத்திட்டு பற்றுச் சீட்டுக்கள், மஹல்லா அட்டைகள் வழங்கப்பட்டமை.
10. பொருளாளருடன், தலைவர் அல்லது செயலாளர் இருவரில் ஒருவர் இணைந்து கையெழுத்திட்டே வங்கியிலிருந்து பணம் மீளப் பெற வேண்டும் என்கிற தீர்மானம் இருந்தும், தலைவர், செயலாளர் மட்டும் கையொப்பங்களிட்டு ஒரு இலட்சம் ரூபாவை காத்தான்குடி இலங்கை வங்கியிலிருந்து மீளப் பெற்றமை.
11. 2011ம் ஆண்டின் கூட்டு ஸகாத் விநியோகத்தின் போது இப்பள்ளிவாசல் சார்பான பயனாளிகளை நம்பிக்கையாளர் சபையின் எவ்வித தீர்மானமும் இன்றி தன்னிச்சையாகத் தெரிவு செய்தமை.
நம்பிக்கையாளர் சபைக்குத் தெரியாத முறையில் மேற்குறிப்பிட்ட துரோகமான வேலைகளில் இவ்விருவரும் ஈடுபட்டு வந்தனர் என்றே நேற்று 2013.09.17ம் திகதி இவர்கள் பதவி நீக்கம் செய்ய்பபட்டனர்.
இதோடு தொடர்புடைய கடந்த வாரம் 09.09.2013ல் வெளிவந்த ‘வார உரைகல்’ செய்தி கீழே இடம்பெறுகிறது:
மெத்தைப்பள்ளிவாசல் தலைவர், செயலாளர் மீது நம்பிக்கையில்லை என நம்பிக்கையாளர்கள் தெரிவிப்பு!
காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் 14 பேர், அப் பள்ளிவாசலின் தற்காலிகத் தலைவரான மர்சூக் அகமட்லெப்பை மீதும், தற்காலிகச் செயலாளரான ஏ.எம். றபீக் ஆசிரியர் மீதும் 11 மோசடிக் குற்றச் சாட்டுக்களை முன்வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளனர்.
மேற்படி பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களான மௌலவி எம்.ஐ.எம். றகீப் (பலாஹி), ஜனாப் கே.எம். எம். அலியார் ஜே.பி, அல்ஹாஜ் யூ.எஸ்.எச்.ஏ. வஹாப் (பொருளாளர்), மௌலவி ஏ. எம். அப்துல்காதர் (பலாஹி), அல்ஹாஜ் ஏ.எம். றஹ்மதுழ்ழாஹ், ஆர்.ரீ.எம். அனஸ், எம்.ஏ. றபீக், அல்ஹாஜ் எம்.சீ.எம். மன்சூர், அல்ஹாஜ் எம்.எம். செய்யத் அஹமத், எம்.ஐ.எம். உசனார் ஜே.பி, எம்.ஏ. கலீல், மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ. செய்யது முகம்மது, அல்ஹாஜ் ஏ.எம்.எம். றவூப் (உப தலைவர்), அல்ஹாஜ் சீ.எம்.அபுல்ஹசன் ஆகியோர் கையெழுத்திட்டு கையளித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களா வன:
(குறித்த 11 மோசடிக் குற்றச்சாட்டுக்களும் மேலுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன)
மேற்சொன்ன காரணங்களினால் தலைவர், செயலாளர் மீது எமக்கு நம்பிக்கையில்லையென்பதை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களான நாம் தெரிவிக்கின்றோம்.
உடனடியாக தாங்கள் இருவரும் பதவிகளில் இருந்து விலகி புதிய தலைவர், செயலாளரைத் தெரிவு செய்ய சபைக் கூட்டத்தைக் கூட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம் என இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கான கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 03ம் திகதி இப்பள்ளிவாசல் நம்பிக்கையாளாத் சபையின் தற்காலிகத் தலைவராகவுள்ள மர்சூக் அகமட்லெப்பை மற்றும் தற்காலிகச் செயலாளர் ஏ.எம். றபீக் ஆசிரியர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இக்கடிதத்தின் பிரதிகள், காத்தான்குடி சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமா ஆகியவற்றுக்கும், முஸ்லிம் சமய விவகார பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் வக்பு சபை தலைவர், உறுப்பினர்களுக்கும் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக ஜமாஅத்தார் சங்கத்தின் செயலாளரும், நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான ஜனாப் கே.எம்.எம். அலியார் ஜே.பி ‘வார உரைகல்’ லிடம் தெரிவித்தார்.

Leave a comment