கொழும்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அடுத்த மாதம் 2ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நேற்று உச்சநீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. ஒரே நாடான இலங்கையில் தனி நாட்டை நிறுவ முயற்சிக்கும் கொள்கைப் பிரகடனத்தை வட மாகாண சபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்திருப்பதாகக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு எதிரான காரணங்களை விளக்குவதற்காக எதிர்வரும் ஒக்டோபர் 02 ஆம் திகதி நீதி மன்றில் ஆஜராகுமாறு அக்கட்சி யின் தலைவர் ஆர். சம்பந்தன், பொதுச் செயலர் மாவை சேனாதிராஜா உட்பட பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் வழங்கியது.
இலங்கையில் தனி நாட்டை அமைப்பது தொடர்பாக குறிப்பிட்டு சமர்ப்பித்த அக்கொள்கைப் பிரகடனம் அரசமைப்புக்கு மாற்றமானதென அந்த மனுமூலம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசப்பற்று தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர, தேசாபிமான பிக்குமார் முன்னணியின் செயலர் பெங்கமுல்லே நாலக்க தேரர், சுவர்ண ஹன்ஸ, மன்றத் தலைவர் புண்ணியாவர்த்தன அல்விஸ், பொதுமக அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சதிஸ் சந்திர சர்மசிலி, யாழ். பெளத்த சங்க தலைவர் அருள் நேத்ரரத்னம் ரவிக்குமார் ஆகியோர் இந்த மனுக்களைச் சமர்ப்பித்திருந்தனர்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், உயர் நீதிமன்ற நீதியரசர்களான கே. ஸ்ரீபவன், ரோஹினி மாரசிங்க ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் இம்மனு விசாரிக்கப்பட்டது.சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிம்பா திலகரத்ன இந்த மூன்று மனுக்கள் சம்பந்தமாக நோட்டீஸ் மட்டும் தமக்குக் கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், செயலாளர், தேர்தல் ஆணையாளர் சார்பில் சட்டத்தரணி ஒருவரும் ஆஜராகவில்லை.
காரணங்களைப் பரிசீலித்த நீதியரசர்கள் குழு, காரணங்களை விளக்குவதற்காக பிரதிவாதிகளின் தரப்பையும் நீதிமன்றத்துக்கு அழைக்கத் தீர்மானித்தது. அதன் பிரகாரம் நோட்டீஸ் வழங்கிய உயர்நீதிமன்றம் மனு தொடர்பான நோட்டீஸை உயர்நீதிமன்ற பதிவாளர் ஊடாக பிரதிவாதிகளுக்கு அனுப்புமாறும் சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டது. வட மாகாண சபை தேர்தலையொட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனம் அரசமைப்புக்கு முரணானதா எனக் கண்டறியுமாறு இந்த மனு மூலம் நீதிமன்றில் கோரப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம், இலங்கையில் தனிநாடு நிறுவுவதே எனப் பிரகடனத்தை செய்யுமாறும் மனுமூலம் நீதிமன்றில் கேட்கப்பட்டிருந்தது.
Leave a comment