மத்திய மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – மனோ கணேசன் -அசாத் சாலி கூட்டாக கோரிக்கை

manoasad– FM. பர்ஹான்

கண்டி:  கண்டி, நுவரெலியா மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்கள்  எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக தமது  கண்டணத்தை தெரிவிக்கும் முகமாக யானை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அத்துடன் யானை சின்ன வேட்பாளர் பட்டியலிலே விருப்பு வாக்குகளை  வழங்கும்போது அவற்றை தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையை எடுத்து காட்டும் முகமாக கவனமாக வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலியும் இன்று கண்டியிலே நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.

கண்டி பேராதனை வீதியில் அமைந்துள்ள அசாத் சாலியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அரசாங்கத்துக்கு எதிராக வாக்கு      

 இந்த அரசு ஒரு இனவாத, மதவாத அரசாங்கம் ஆகும்.  எனவே நமது ஜனநாயக எதிர்ப்பை இந்த ஆட்சிக்கு எடுத்து காட்டுவதற்கு இந்த தேர்தலை நாம் ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும். இதற்காக கண்டி, நுவரெலியா மாவட்ட தமிழ் பேசும்  மக்கள் தமது வாக்குகளை யானை  சின்னத்துக்கு வழங்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தின் வெற்றிலை சின்னத்துக்கு தமிழ் பேசும் மக்கள் தவறியும் வாக்களிக்ககூடாது. இந்த ஆட்சியின் சின்னமான வெற்றிலைக்கு வழங்கப்படும்  ஒவ்வொரு வாக்கும் இந்நாட்டில் பள்ளிவாசல்களையும், அம்மன் கோவில்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் உடைக்கும் பாவச்செயல்களை அங்கீகரிக்கும் வாக்குகள் என்பதை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் மறந்துவிடக்கூடாது.

 அதேபோல் கண்டி மாவட்டத்தில் அரசின் பங்காளி கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரசும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் போட்டியிடுகின்றன. வெற்றிலை சின்னத்துக்கு வாக்களிக்க விரும்பாத தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை தந்திரமாக கவருவதற்காகவே இந்த கட்சிகளை இந்த அரசாங்கம் இவர்களது சொந்த சின்னங்களில் போட்டியிட வைத்துள்ளது  என்பதை தமிழ் பேசும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே இந்த இனவாத வெற்றிலை சின்னத்தின் பங்காளிகளான சேவல், மரம், மண்வெட்டி ஆகிய சின்னங்களுக்கு அளிக்கும் வாக்குகளும் வெற்றிலை சின்னத்துக்கே போய் சேருகின்றன என்பதையும்   தமிழ் பேசும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.       

எனவே கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் தமிழ் பேசும் மக்கள் அரசுக்கு எதிராக யானை சின்னத்துக்கு  வாக்களிக்க வேண்டும். வெற்றிலை, சேவல், மரம், மண்வெட்டி ஆகிய சின்னங்களுக்கு வாக்களிக்ககூடாது என நாம் கூட்டாக கோரிக்கை விடுக்கின்றோம்.                  

 விருப்பு வாக்குகள்

யானை சின்னத்தில் விருப்பு வாக்குகளை வழங்கும்போது ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி  வேட்பாளர்களை தேடியறிந்து வழங்கவேண்டும். 

கண்டியில் வாழும் தமிழ் மக்கள் யானை சின்னத்தில் இலக்கம் 15 ல்  போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர் வேலு குமாருக்கும், இலக்கம் 31 ல் போட்டியிடும் ஐதேக வேட்பாளர் ராஜரட்னத்துக்கும் வாக்களித்துவிட்டு தமது மூன்றாவது விருப்பு வாக்கை  யானை சின்னத்தில் இலக்கம் 10 ல் போட்டியிடும் தேசிய ஐக்கிய முன்னணி  தலைவரும், வேட்பாளருமான அசாத் சாலிக்கு வழங்க வேண்டும்.

 அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்கள்  யானை சின்னத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்களாக இலக்கம் 11 ல் போட்டியிடும் ராஜ்குமாருக்கும், இலக்கம் 05 ல் போட்டியிடும் சந்திரகுமாருக்கும் தமது இரண்டு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும்.        

ஜனநாயக மக்கள் முன்னணி – தேசிய ஐக்கிய முன்னணி 

 இக்கோரிக்கைகளை நாம் மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் வாழ்கின்ற  தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு கூட்டாக விடுக்கின்றோம். யுத்தம் முடிவடைந்து விட்ட இன்றைய காலகட்டத்தில் கூட தமிழ், முஸ்லிம் மக்களை இனரீதியாகவும், மதரீதியாகவும் தொடர்ந்து  ஒடுக்கி வருகின்ற இந்த ஆட்சிக்கு எதிராக சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் இணைந்து நமது இரண்டு கட்சிகளும் நடத்தி வருகின்ற தேசிய ஜனநாயக போராட்டத்துக்கு இந்த தேர்தல் வாக்களிப்பின் மூலம் வலு சேர்க்குமாறு நாம்  மத்திய மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை உரிமையுடன் கோருகின்றோம்.     

Published by

Leave a comment