மட்டக்களப்பு: ஊடகங்களுடன் பேசுவது பகைவர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரடியாக பேசுவதற்கு சமமானது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார். ‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
இலங்கை நாட்டின் யுத்தத்திற்கு பின்னரான பாரிய வளர்ச்சிக்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பும் மிக முக்கிய காரணியாகும்.
கடந்த 30 வருட கால கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஊடகவியலாளர்கள் நிறைய பங்கு வகிக்கின்றனர்.
ஆனர்த்தங்களின் போது ஊடகவியலாளர்களின் பங்கு,யுத்தத்தின் போது அவர்களின் பங்கு என பல்வேறு பங்குகள் உள்ளன.
ஊடகவியலாளர்கள் என்போர் சமூகத்தில் நடைபெறும் முக்கிய விடயங்களை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்ட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை செல்லாத சிறுவர் தொகை,சிறுவர் துஷ்பிரயோகம்,பெண்கள் துஷ்பிரயோகம்,வயதுக்கு முந்திய திருமணம்,திருமணத்திற்கு முன் கர்ப்பம்,அளவுக்கதிகமான மது,போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட அம்சங்களை குறைக்கும் வண்ணமும் அவற்றை முற்றாக ஒழிக்கும் வண்ணமும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வறுமை நிலை கூடிய மாவட்டமாக உள்ளதால் வறுமையை இல்லாதொழிக்க மக்களின் வாழ்க்கைத் தரத்தை கூட்ட வேண்டும்.
வலுவிழந்தோருக்கு உதவுதல்,வறுமையில் உள்ளவர்களுக்கு உதவி செய்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே குறித்த விடயங்கள் பத்திரிகைகளில் எழுதப்பட வேண்டும் என்பதுடன் மக்கள் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment