மனைவி அமைவதெல்லாம்… (சிறுகதை)

family– MJ

‘தம்பி அஸ்லம். தேதன்னி போட கேஸ் முடிஞ்சு போய்ச்சு. கேஸ் காரனும் வரல்ல. கேஸ் காரன் எத்தன மணிக்கு வருவான்?’

‘பக்கத்து ரூமுல யாராவது இருக்காங்களான்று பாருங்க நானா. இருந்தா அவங்கட அடுப்ப கொஞ்சம் யூஸ் பன்னுங்க. நான் ஆறுமணியாகும் வாரதற்கு’.

அப்துல்லாஹ்…. கட்டார் வந்து ஒரு வாரமாகிறது. வேலை தேடி கட்டார் வந்தார். ஓருவாரமாக விண்ணப்பித்த, முதல் நேர்முகப் பரீட்சைக்குப் போய்வந்து ரூமிற்கு வந்ததும் தேயிலை குடிப்பதற்கு ஆயத்தமானார்.

தேத்தன்னி போடுவதற்கு கேஸ் தீர்ந்திருந்தது. குடிநீர் கொல்கலனைப் பார்த்தார் அதிலும் குடிநீர் தீர்ந்திருந்தது. பக்கத்துக்கடைக்குப் போக வேண்டுமானால் பாலைவனமூடாக 3 மைல்கள் கடந்து அந்நகரத்தை அடைய வேண்டும். சுட்டெரிக்கும் வெயில் வேற…

ஓர் முதலாளியாக ஊரில் பிடவைக் கடை செய்த அப்துல்லாஹ்வுக்கு, வியாபாரம் சோபிக்காததாலும், அளவுக்கதிகமாக கடன் சுமைகளாலும், வாடிக்கையாளர்களின் சில ‘பொல்லு’ களாலும் கட்டாருக்கு ஓர் வேலையைத் தேடி வந்தான்.

திருமணம் முடிந்து 5 வருடங்கள். இரு குழந்தைகளும் அன்பு மனைவியும் அழகிய குடும்பம். என்றாலும் கடன் சுமையால் ஊரில் தொடர்ந்து இருக்கமுடியாது. கடனை அடைத்து, பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஏதாவது சேமிக்க வேண்டும் என்ற நோக்கில் கட்டார் வந்தான்.

ஒரு ரூமில் 6 பேர். பக்கத்து ரூமில் மலையாளிகள். என்றாலும் ஊர், நாடு வேறுபாடின்றி சந்தோசமாக ஒற்றுமையாக பல வருடங்களாக அவர்கள் இருந்து வருகின்றனர்.

காலையில் வேலைக்குப்போனால் மாலையில்தான் வருகிறார்கள். சிலர் ‘பார்ட்டைம்’ வேலை செய்தால் இரவு வந்து சேர்கின்றனர். பல துறையைச் சேர்ந்தவர்களும் இங்கு இருக்கின்றனர்.

ஓரு நாளைக்கு ஒருவர் சமைக்க வேண்டும். வெள்ளிக்கிழமையில் நன்றாக சமைக்கக்கூடிய ஒருவர் சமைப்பார். அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். அப்துலலாஹ் ‘பொஸ்’ ஆக ஊரில் இருந்தவர். அவருக்கு சமையல் தெரியாது. டீ போடக்கூட இங்கு வந்துதான் கற்றுக்கொண்டார்.

அன்றிரவு சரியான பசி. வேலை முடிந்துவந்து சமைத்து முடிப்பதற்கு இரவு 9 மணியாகிவிட்டது. அப்துல்லாஹ் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தார். சஹன் சாப்பாடுதான். மீன் கறி. மீன் தன்னீரில் ஓடியது. அந்தளவுக்கு கறி தன்னீரால் கழுவப்பட்டிருந்தது. என்ன செய்வது பசி வேற. ‘பொஸ்’ எல்லாம் இங்க சரிவருமா? சாப்பிட்டான்.

அடுத்த தினம் ரொட்டி இருந்தது. ‘பசிச்சா இந்த ரொட்டிய நேற்றைய ஆனத்தோட தொட்டு சாப்பிடுங்க நானா’ என்று சொல்லிவிட்டு வேலைக்குப் போயிட்டாங்க.

அடுத்த நாள் தனது ரூம் ஆட்களுடன் வேறு ஒரு கேம்ப்யிற்கு சென்றான் அப்துலலாஹ். அங்கும் எம்மவர்கள் இருந்தனர். இரவுச்சாப்பாட்டைச் சாப்பிட்டுப் போகும்படி வற்புறுத்தியதால் வந்தவர்களுடன் அப்துல்லாஹ்வும் உட்கார்ந்து சாப்பிட்டான்.

கோழிக்கறி. சுவையாகத்தான் இருந்தது. கோழித்துண்டை கையிலெடுக்கும் போது ஓர் தலைமயிர் அப்துல்லாஹ்வின் கைவிரல்களில் சிக்கிக்கொண்டது.

பசி வயிற்றைக் குடைந்தது. அப்துல்லாஹ்வால் தன்மானத்தை இழக்க முடியவில்லை. பசி அவனை வென்றுவிட்டது. தலைமயிரை ‘சுப்றா’வில் வைத்துவிட்டு வயிறு நிறைய சாப்பிட்டான். அங்கிருந்து விடைபெற்றான்.

அன்றிரவு அவனால் தூங்க முடியவில்லை. நண்பர்கள் காலையில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஆனால் அவனால் தூக்கத்தை அடைய முடியவில்லை. அவன் அழுதான்.. அவனது சிந்தனைகள் நினைவுகள் எல்லாம் அவனது அன்பு மனைவியை தேடியது.

கடைக்குப் போகும்போது விதம்விதமாக சாப்பாடு சமைத்து கறி அல்லது சொதி சமைத்து மேசையில் ஆவி பறக்க வைப்பாள் அப்துல்லாஹ்வின் அன்பு மனைவி கதீஜா.

பிட்டு வாசனை, தேங்காய்ச் சம்பல், இறால் சொதி… இப்படி எத்தனை முறை என்னை கடைக்கு வழியனுப்பி வைத்திருக்கிறாள்.

பகல் சாப்பாட்டிற்கு விதம்விதமாக சமையல் செய்து, எனக்காகவே காத்திருப்பாள். இரவுச் சாப்பாடும் அப்படித்தான். அப்துல்லாஹ்வுக்கு எல்லாமே உடனடியாக சமைத்திருக்க வேண்டும். அவனது விருபப்படியே அவனது மனைவி சமைத்து வைப்பாள்.

எப்படித்தான் அவள் சமைத்தாளும், ஓர் தலைமயிர், தேங்கயாத்தும்பு அல்லது சோற்றில் கல், மண் அப்துல்லாஹ்வின் கண்களுக்குப் பட்டால் சாப்பாடு மேசையிலிருந்து நிலத்திற்கு வீசியெறியப்படும். பாத்திரங்கள் உடைந்து நிலத்தில் சிதறும்.

அதுமாத்திரமன்றி, கேளாத கேள்வியெல்லாம் கதீஜாவை நோக்கி கேட்பான். அவள் அழுவாள். சாப்பிடாமலேயே பிள்ளைகளுக்கு சாப்பாட்டை ஊட்டி தேம்பித் தேம்பி அழுவாள். அதுமாத்திரமன்றி புதிய சாப்பாட்டைத் தயார் செய்தும் கொடுப்பாள்.

அப்துல்லாஹ் தன்னை நினைத்து வெட்கப்பட்டான். கதீஜாவை நினைத்து அழுதான். எவ்வளவு அன்பானவள். அவளைப் போன்று யாரால்தான் விதம் விதமாக, வகைவகையாக சமைக்க முடியும்? தனக்குள் கேட்டுக்கொண்டான்.

எத்தனைமுறை அவளை ஏசி இருப்பேன். சாப்பாட்டிற்காகவே சில நாட்கள் பிரிந்திருப்பேன். தேத்தன்னி வானா என்றாலும் ஏதாவது குடிச்சிட்டுப் போங்களேன் என்று கெஞ்சுவாளே….

அவனால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

இன்று காலையில்கூட தனது கனவரின் சாப்பாட்டின் பரிதாப நிலையை அறிந்து போனில் தேம்பித் தேம்பி அழுதாள். டீ குடிச்சிங்களா? சாப்பிட்டீங்களா? எத்தனை முறை அவள் கேட்டிருப்பாள்?

எல்லாமே காட்சியாக அவனது கண்விளிகளில் நீர்க்குமிழிகளாய் தேங்கி நின்றன.

வேகா வெயிலில் நின்று உடுப்புக்களைக் கழுவி காயப்போடுவாள். காய்ந்த உடுப்புக்களை அயர்ன்செய்து மடித்துத் தருவாள். நாளைக்கு என்ன உடுக்க வேண்டும். ஜூம்ஆவுக்கு என்ன அணிய வேண்டும் என்ற அவளது இரசனையை நினைத்து பெருமிதம் கொண்டான்.

எல்லா மனைவிமாரும் கதீஜாவைப் போலவேதானே இருப்பார்கள். ஒரு புருஷனுக்காக எத்தனை அர்ப்பணிப்புக்களை எத்தனை தியாகங்களை பெண்கள் செய்கின்றனர். தலை மயிரை வேண்டுமென்றா சாப்பாட்டுக்குள் போடுகிறார்கள். தவறுதலாக அது விழுந்திருக்கும். அல்லது எங்கோ ஓர் மூலையில் கிடந்தது, ‘பேன்’ காற்றில் சாப்பாட்டுக்குள் வீசப்பட்டிருக்கும்.

இதுவெல்லாம் ஓர் தகறாதா. கதீஜா என்னை மன்னித்துவிடு.

மனதுக்குள் தன் தவறை நினைத்து வருத்தப்பட்டான். இப்போது அப்துல்லாஹ்வுக்கு ஓர் மனச்சுமை குறைந்தது போல் இருந்தது.

விடியும்வரை காத்திருந்தான்.

கதீஜாவிடம் முதலில் மன்னிப்புக் கேட்க.

Published by

Leave a comment