வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கடற்படைத் தளத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அதில் இருவர் பொலீஸ் அதிகாரிகள் என்றும் தெரியவந்துள்ளது.
வாஷிங்டனில் அமெரிக்க கப்பல் கட்டும் தளம் உள்ளது. அங்கு பொறியியலாளர்கள், ஊழியர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், காலையில் முகமூடி அணிந்து ராணுவ சீருடையில் 2 மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் 6 அடி உயரத்தில் கறுப்பினத்தை சேர்ந்தவர் போல இருந்தார். அவர்கள் 2 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், கொலம்பியா மாவட்ட பொலீஸ் அதிகாரி, கடற்படை அதிகாரி உள்பட 13 பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவத்தை தொடர்ந்து பொலீஸ் மர்ம மனிதர்களுடன் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். எப்.பி.ஐ. பொலீசார் அதிக அளவில் வரவழைக்கப்பட்டனர். அவசர கால வாகனங்கள் மற்றும் அம்புலன்சுகளும் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தன. கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று, கட்டிடத்தின் உச்சியில் வட்ட மடிக்கத் தொடங்கியது.
பொலீசாருக்கும் மர்ம மனிதர்களுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்தது. ஒவ்வொரு மாடியாக தப்பி ஓடிய மர்ம மனிதர்களை பொலீசார் விரட்டி விரட்டி சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் இரு மர்ம நபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, பக்கத்தில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது. கப்பல் கட்டும் தளம் அருகில் உள்ள சாலைகள் மூடப்பட்டன. பள்ளிக்கூடங்கள் உள்பக்கமாக பூட்டப்பட்டன. பாலங்களும் மூடப்பட்டன. சம்பவம் நடந்த இடத்துக்கு 1.8 கி.மீ. தூரத்தில் அமெரிக்க பாராளுமன்ற கட்டிடம் உள்ளது. அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையிலும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டது. அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கடற்படைத் தளங்களில் ஒன்றான வாஷிங்டன் தளத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவரவில்லை என வாஷிங்டன் மேயர் வின்சென்ட் கிரே தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். எப்.பி.ஐ. அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொலீசாருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு ஒபாமா உத்தரவிட்டார்.
வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகவும் கோழைத்தனமான செயல் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment