மட்டக்களப்பு: ‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு நேற்றுக் காலை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 09.30மணி முதல் மதியம் 1.30 வரை இடம்பெற்ற இச் செயலமர்வில் ‘சிறந்த ஊடக கலாசாரத்தை நோக்கிய ஊடகத்துறையும் சட்டமும்’ எனும் தலைப்பில் சட்டத்துறை வழக்கறிஞரும் ஊடகவியலாளருமான சட்டத்தரணி ஏ.எம்.வைஸ், ‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் தினகரன் வாரமஞ்சரி பிரதி ஆசிரியர் வி.சு.கருணாநிதி ஆகியோர் விசேட விரிவுரைகளை நிகழ்த்தினர்.
இச்செயலமர்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ. ஹிஸ்மி முஹம்மத், தினக்குரல் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் மூத்த ஊடகவியலாளருமான ஏ.எம்.நிலாம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் அஹமட் முனவ்வர், ஊடக நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக மாவட்ட அரச அதிபர் சார்ல்ஸ், பிரதியமைச்சர் முரளிதரன் ஆகியோர் உரையாற்றியதுடன் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.
![8[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/82.jpg?w=150&h=112)
![8[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/82.jpg?w=780&h=585)
![10[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/1012.jpg?w=780&h=585)
![11[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/1112.jpg?w=780&h=585)
Leave a comment