மட்டக்களப்பு: இலங்கையில் குற்றச் செயல்கள் குறைந்த மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்கின்றது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
இலங்கையிலுள்ள ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மட்டக்களப்பு மாவட்டம் குற்றச்செயல்கள் குறைந்த ஒரு மாவட்டமாகும்.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடம்,மாங்காடு கோயில்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையார்கள் கூட வடமாகாண யாழ்ப்பாணம்,கிளிநொச்சி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகும்.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்தோர் குற்றச்செயல்களில் ஈடுபடுவது மிகக்குறைவாகும்.ஆனால் குறித்த கோயில் கொள்ளைச் சம்பவத்தை எதிர்க்கட்சிகள் வித்தியாசமாக சித்தரித்து கொள்ளையில் ஈடுபட்டது இரானுவம் எனக் கூறி அரசாங்கத்தை குற்றம் சுமத்திப ல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.ஆனால் அதில் உண்மையான சூத்திரதாரிகளை எமது பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
அது மாத்திரமல்லாமல் எமது மாவட்டத்தில் குற்றச்செயல்களை குறைப்பதெற்கென பொலிஸ் விசேட குழுக்கள்,விசேட கண்காணிப்புக் குழுக்கள் போடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குற்றங்களை குறைப்பதற்கென இரவு நேரத்திலும் அதிகாலை வேளையிலும் மேலதிக வகுப்புக்கள் நடாத்தக் கூடாது,நெட் கபேக்கள்,வீடியோ சென்றர்கள் திடீர் பரிசீலனைக்கு உட்படுத்தப்படல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸார் பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றனர்.
ஆகவே நாட்டில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment