மிஸ்வாக் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டமும் பல் வைத்திய உண்மைகளும் – (தொடர் 1)

miswakஅஹமட் ஆஸிர்

முன்னேறி வரும் நவீன யுகத்தில் இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக சிந்தனாரீதியான, கருத்து ரீதியான, தர்க்கரீதியான, விஞ்ஞான மற்றும் வைத்தியரீதியான பல்வேறு சவால்கள் விடுக்கப்படுகின்றன. அவை அனைத்தையும் தகர்த்தெறிந்து அவற்றிற்கு எதிராக மேலும் பல புதிய சவால்களை முன்வைத்து நெஞ்சை நிமிர்த்தி இஸ்லாம் தூய மார்க்கம் என்பதைப் பறைசாட்டும் தனி அழகு அல்குர்ஆனுக்குரியதாகும். அல்குர்ஆன் முக்காலத்திற்கும் பொதுவான சவால்களை விடுக்கின்றது. அது எத்துறை சார்ந்ததாக இருந்தாலும் சரியே. இதனையே அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

‘மேலும் தமது அடியார் மீது இறக்கி வைத்த இவ்வேதத்தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருப்பின் இதுபோன்ற ஒரு அத்தியாயத்தை கொண்டு வாருங்கள்.நீங்கள் அவ்வாறு செய்யவில்லையாயின் நீங்கள் ஒரு போதும் அவ்வாறு செய்யவே மாட்டீர்கள். (அல்பகரா 23:24)

எனவே இஸ்லாம் ஒவ்வொரு துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கும் புத்துயிர் அளித்து ஆய்வுத் திறனையும் சிந்தனா சக்தியையும் தூண்டி விடுகின்றது. ஒருவரது ஆய்வு வைத்தியம், விஞ்ஞானம், பொருளாதாரம், அரசியல், சமூகவியல் போன்ற எத்துறை சார்ந்ததாக இருந்தாலும் அவருக்கு மிகப்பக்க பலமான உசாத்துணை நூலாக அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் ஏனைய மூலதாரங்களும் திகழ்கின்றன.

இந்த வகையில் வைத்திய துறையின் ஒரு பிரிவான பல் வைத்தியத் துறையுடன் சம்பந்தப்பட்ட மிஸ்வாக் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை (Islamic view about Miswak and Dental Facts) எமது வாசகர்களுக்கு ஆன்மீக ரீதியாகவும் லௌகீக ரீதியாகவும் மிகப் பயனளிக்கும் எனக் கருதுகின்றேன்.மேலும் இவ் ஆய்வுக் கட்டுரையில் மிஸ்வாக் (பல் துலக்கல்) என்பதற்கு இஸ்லாம் எந்தளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதையும் அதற்குண்டான காரணங்களையும் அதனால் உண்டாகும் நன்மைகள் போன்ற விடயங்கள் ஆழமாக ஆராயப்படுவதுடன் அவை தற்கால நவீன பல் வைத்தியத் துறைக்கு எந்தளவு பொருந்துகின்றது என்ற விடயங்களும் விளக்கப்படுகின்றன.

அத்துடன் பொது மக்களுக்கு நவீன பல் வைத்தியத் துறை சார்ந்த அறிவைக் கொடுப்பதுடன் அவர்களால் எதிர்கொள்ளப்படும் பல் வைத்தியம் சார்ந்த பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுடன் நவீன பல் வைத்தியத் துறையின் பக்கம் மக்களை வழிகாட்டி இஸ்லாம் இபாதாவாக கருதும் மிஸ்வாக்கில் (பல் துலக்கல்) உள்ள சந்தேகங்களையும் நிவர்த்தி செய்கின்றது. எனவே இவ் ஆய்வுக் கட்டுரை பொது மக்களுக்கு மிக பலனுள்ளதாக அமையும் என்பது எனது எதிர்பார்ப்பாக இருப்பதுடன் உலகில் இஸ்லாமிய மயமாக்களுக்கான ஒரு அஸ்திவாரமாகவும் அமையும் என்பது எனது கருத்தாகும்.
(தொடரும்)

தொகுப்பு – உம்மு ஷைமா அஸ்ஸாலிஹாத்

Published by

Leave a comment