சிலாபம்: நாட்டில் பல பள்ளிவாசல்களைத் திறந்து வைத்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்படமாட்டார் என்பது உறுதி என சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச்.எம். பெளஸி தெரிவித்தார். சிலாபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பெளஸி:
பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக வதந்திகளை பரப்பி முஸ்லிம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முனையும் சக்திகளிலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாப்பது அவசியம் எனவும் தெரிவித்தார். ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;
சிலாபம் தொகுதிக்கு நான் புதியவனல்ல. இப்பகுதிக்கு சேவை செய்த அமைச்சர் என்ற வகையில் இப்பகுதி மக்கள் முன் பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். சிறந்த விவேகமுள்ளவர்கள் இங்கு இம்முறை போட்டியிடுகின்றனர். மக்கள் சகோதரர்களாகச் செயற்பட்டு வெற்றிலைக்கு வாக்களித்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது அவசியம்.
ஹஜ் செல்லும் ஹஜ்ஜாஜிகளில் முதற் குழுவினர் ஹஜ் பயணம் மெற்கொள்கின்றனர். முதல் தடவையாக எமக்கு விமான நிலையத்தில் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நாம் தொழுகையில் ஈடுபட்டோம். அதற்காக ஜனாதிபதிக்கு நன்றிகள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சகல மதங்களையும் மதிப்பவர். கெளரவிப்பவர். சகல மக்களின் அபிமானத்தையும் பெற்றவர். முஸ்லிம் பள்ளிகளை திறந்து வைத்த பெருமைக்குரிய ஜனாதிபதி இவர்.
நுவரெலியா, பேருவளை, காத்தான்குடி போன்ற பகுதிகளில் பள்ளிவாசல்களை அண்மையில் திறந்து வைத்தார். தம்புள்ளை பள்ளி வாசலை உடைக்கப் போவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு சம்பந்தப்பட்ட வர்களிடம் கலந்துரையாடினேன். இவ்வாறு ஒரு முடிவு எடுக்கப்பட்டவில்லை என்பது தெரிய வந்தது. முஸ்லிம்கள் இத்தகைய வதந்திகளில் ஏமாறக் கூடாது.
ஐந்து வேளை வானொலியில் ‘பாங்கு’ சொல்வதற்கு ஜனாதிபதியே வழி வகுத்தவர் அவர் முஸ்லிம்களின் நண்பர். முஸ்லிம் மக்களை நேசிப்பவர். அத்தகையவர் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டார். பள்ளிகள் தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அரசாங்கம் அதற்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்.
– மூலம்: தினகரன்
Leave a comment