கிளிநொச்சி: யாழ்தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 23 வருடங்களின் பின்னர் தொடக்கி வைத்துள்ளதன் மூலம் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப்பாலம் மீண்டும் மலர்ந்துள்ளது என போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
வவுனியா ஒமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில்சேவை இன்றைய தினம் (14) ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒமந்தை தொடக்கம் கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில்சேவையும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் இடம்பெறுமென்றும் இந்த ரயில்சேவைக்காக நிதிப்பங்களிப்பினை இந்திய அரசு வழங்கி வருகின்றது.
இந்நிலையில் தெற்கில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்சேவைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் வடபுல மக்களுக்கு மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் இந்த ரயில்சேவைகள் கிடைக்கும் வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ளார்.
23 வருடங்களின் பின்னர் யாழ்.தேவி புகையிரத சேவை இடம்பெறுகின்றது என்பதுடன் இது வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப்பாலத்தை வலுப்படுத்தும் வகையிலான பயண சேவையாக அமையுமென்றும் சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றும் போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இப்பகுதிக்கான ரயில்சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைக்காக இந்திய அரசிடமிருந்து எமது அரசு இரண்டு வீத வட்டியுடன் 20 வருட கடனடிப்படையில் நிதியினை பெற்றுள்ளது.
இன்றுள்ள அமைதியான சமாதானமான சூழலை ஏற்படுத்தித்தந்தவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்பதுடன் எமது மக்களின் சார்பில் அவருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்பதுடன், ரயில் சேவைக்காக நிதியினை வழங்கிய இந்திய அரசுக்கும் மற்றும் ஏனையோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இன்று தொடங்கப்பட்டுள்ள ரயில் சேவையானது எமது மக்கள் பல வகைகளிலும் நிச்சயமாக உதவுமென்றும் சுட்டிக்காட்டினார்.
இதில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹா உரையாற்றும் போது, இந்த நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியானது என்றும் யாழ்ப்பாணத்திற்கான ரயில்சேவைக்காக குறித்த பாதைகள் புனரமைக்கப்படுமென்றும் அதற்கு இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுமென்றும் சுட்டிக்காட்டினார்.
முன்பதாக ஒமந்தை ரயில் நிலையத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து ரயில் சேவைக்கான பயணச்சீட்டினை சம்பிரதாயபூர்வமாக கொண்டதன் பின்னர் ரயில் சேவைக்கான நாடாவையும் வைபவரீதியாக வெட்டி திறந்து வைத்ததுடன் ஒமந்தையிலிருந்து கிளிநொச்சி வரை உத்தியோகபூர்வ பயணத்தையும் மேற்கொண்டார்.
ரயில் பயணித்த போது தண்டவாளத்தின் இருமருங்கிலும் நின்றுகொண்டிருந்த மக்கள் தமது கைகளை அசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து யாழ்.தேவி ரயிலை வரவேற்றுக் கொண்டனர்.
கிளிநொச்சி ரயில் நிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்ததும் பெயர்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதை அடுத்த ரயில் சேவைகள் தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.
இதனிடையே கிளிநொச்சி ரயில் நிலையத்தில் அமையப் பெற்றுள்ள கொமர்சல் வங்கியின் ஏ.ரி.எம் தொகுதியையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
தொடர்ந்து அரங்கு நிகழ்வுகள் மதத்தலைவர்களின் ஆசியுரைகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நினைவுப் பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரதியமைச்சர் வீரகுமார திஸநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், அஸ்வர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தம்மிக்க பெரேரா, இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.