ஹராரே: இன்று நிறைவடைந்த சிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே 24 ஓட்டங்களால் பாக்கிஸ்தானை வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் குறிப்பாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசை அண்மைக்காலமாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் இந்த அதிர்ச்சித் தோல்வியைத் தழுவி, சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 6ம் இடத்துக்குப் பின் தள்ளப்பட்டிருக்கின்றது.
பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பாஉல் ஹக், மற்றும் அனுபவ துடுப்பாட்ட வீரர் யூனிஸ்கான் ஆகியோர் மாத்திரமே ஓரளவு துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தாலும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சிம்பாப்வேயின் பந்து வீச்சுக்கு வந்த வேகத்தில் மைதானத்தைவிட்டு திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.
1992ம் ஆண்டிலிருந்து சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் சிம்பாப்வே, இதுவரை 5 டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பெற்றிருப்பதுடன், 9 தொடர்களைச் சமன் செய்திருக்கின்றது.
முதன் முதலாக 1998-99 இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியாவில் வைத்து சிம்பாப்வே கைப்பற்றி வரலாற்று சாதனையைப் படைத்திருந்தது. இறுதியாக இன்றைய போட்டியில் பாகிஸ்தானை வெற்றிபெற்று தொடரை 1:1 என சமன் செய்திருக்கின்றது.
![167253.2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/167253-21.jpg?w=244&h=300)
சிம்பாப்வேயின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பாப்வே வீரர்களும், இரசிகர்களும் வெற்றிக்களிப்பில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் பாக்கிஸ்தானின் பயிற்றுவிப்பாளரிலிருந்து வீரர்கள்வரை புதிய மாற்றங்கள் நிகழவாய்ப்பிருப்பதாக தெரியவருகிறது. பாகிஸ்தான் அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளர், டேவிட் வட்மோரின் ஒப்பந்தம் இன்னும் நிறைவடையாத நிலையில் அவரை தொடர்ந்தும் பயிற்சியாளர் பணியில் அனுமதிப்பதா என்பது பற்றி பாகிஸ்தான் கிரிக்கட்சபை ஆலோசித்து வருகின்றது.
போட்டியின் ஆட்ட நாயகனாக 5 விக்கட்டுக்களை எடுத்து போட்டியைத் திசை திருப்பிய சிம்பாப்வேயின் பந்து வீச்சாளர் டென்டை சதாராவும், தொடர் நாயகனாக பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் யூனிஸ்கானும் தெரிவு செய்யப்பட்டனர்.


Leave a comment