ஓமந்தை: ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, கிளிநொச்சி ரயில் நிலையம், சுன்னாகம் உப மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையும் ஜனாதிபதி அவர்கள், ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றவுள்ளார். இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஜனாதிபதி, சுன்னாகத்தில் 1800 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருக்கும் உப மின் உற்பத்தி நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார். எல்.ரி.ரி.ஈ யினரால் வடபகுதிக்கான ரயில் சேவைகள் சீர் குலைக்கப்பட்டதுடன், 1990 ஆம் ஆண்டுடன் வடபகுதிக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் ரயில் தண்டவாளங்கள் கழற்றப்பட்டு எல்.ரி.ரி.ஈ யினரால் பயன்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நான்கு வருடங்களில் வடபகுதிக்கான ரயில் சேவைகள் கிளிநொச்சிவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாளை 15 ஆம் திகதி முதல் பயணிகளுக் கான ரயில் சேவைகள் கிளிநொச்சிவரை இடம்பெறவுள்ளன. அதேபோல, யுத்த காலத்தில் சீர் குலைந்திருந்த மின்விநியோகம் யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தால் சீர் செய்யப் பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே சுன்னாகம் உப மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று 14 ஆம் திகதி சுன்னாகம் உப மின் நிலையத்தை மக்களிடம் கையளிக்கிறார்.இரு தசாப்தங்களுக்குப் பின்னர் வடக்கையும், தெற்கையும் தேசிய மின் வலையமைப்பில் இணைந்து இந்த சுன்னாகம் மின் உப நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 1800 மில்லியன் ரூபா செலவிலான இத்திட்டம் செயலுருப் பெற்றதும் முழு யாழ்ப்பாண தீபகற்பத்துக்கும் மின்சாரம் கிடைக்குமென மின் சக்தி, எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். இங்கு 63 மெகாவட் மின்சாரம் பெறப்படும். 1,20,000 வீடுகளுக்கு மின் வசதி கிடைக்கும்.
சிறிய நடுத்தர கைத்தொழில்களுக்கும் இதிலிருந்து மின்சாரம் வழங்கப்படும்.23 வருடங்களுக்கு முன்னர் லக்சபான மின் நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. புலிப் பயங்கரவாதிகளின் நடவடிக்கைக ளால் 1990 லிருந்து மின்சாரம் சீர்குலைந்தது. 2009 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அமுல்படுத்திய வடக்கின் வசந்தம் மூலம் வடபகுதிக்கு மின்சார வழங்கல் ஆரம்பமானது.
இத்திட்டத்தின் கீழ் 3839 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஜப்பான் அரசின் கடன் உதவியும் பயன்படுத்தப்பட்டு வவுனியா விலிருந்து கிளிநொச்சிக்கும், அங்கிருந்து சுன்னாகம் வரையும் 72 கிலோ மீற்றர் தூரத்துக்கு 132 கிலோ வாட் மின் வயர் இணைப்பு வழங்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.24 மெகாவொட் சக்தி கொண்ட வடக்கின் மின் நிலையம் ஜனாதிபதியினால் கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி ஆரம் பிக்கப்பட்டது. முழுவதும் உள்ளூர் பொறியியலா ளர்களின் தொழில்நுட்பம் மூலம் இது நிர்மாணிக்கப்பட்டது.
Leave a comment