கராச்சி: தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் சச்சின் டெண்டுல்கர் ஆட வேண்டும். அதுவும் கொல்கத்தா ‘ஈடன் கார்டன்’ மைதானத்தில் இப்போட்டி நடைபெற வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான வசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியுடன் மோதித்தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார் சச்சின் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தனது கடைசி டெஸ்ட் போட்டியையும் பாகிஸ்தானுடன் சச்சின் ஆட வேண்டும் என்று அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள சச்சின் தனது 200வது டெஸ்ட் போட்டியைச் சந்திக்க தயாராகி வருகிறார். மேற்கிந்தியத் தீவுகள் அணி நவம்பரில் இந்தியா செல்லவிருக்கின்றது. அப்போது தனது 200வது டெஸ்ட் போட்டியை அந்த அணிக்கு எதிராக சந்திக்கவுள்ளார் சச்சின்.
இந்த போட்டி எங்கு நடத்தப்படும் என்பதில் இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. மும்பை என்றும் கொல்கத்தா என்றும் பேச்சு அடிபடுகிறது. பெங்களூரும் போட்டியில் உள்ளது.
200வது டெஸ்ட் போட்டியில் சச்சின் ஆடி முடித்ததும், புதிய உலக சாதனை படைப்பார். அதாவது இதுவரை எந்த அணியின் வீரரும் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை. எனவே சச்சின் புதிய சாதனை படைக்கக் காத்துள்ளார்.
தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே அவர் ஐபிஎல் போட்டிகள், ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். டெஸ்ட் மட்டுமே மீதமாக உள்ளது.
இந்த நிலையில்தான் தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுடன், ஈடன் கார்டன் மைதானத்தில் மோத வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார் அக்ரம்.
‘டென்டுல் தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தானுடன் சந்திக்க வேண்டும். இரு நாட்டு ரசிகர்களும் இந்தப் போட்டியைப் பார்த்து ரசித்து ஸ்தம்பித்துப் போக வேண்டும். ஈடன் கார்டன் மைதானத்தில்தான் அதிக அளவிலான ரசிகர்களை அமர வைக்க முடியும். இது நடந்தால் அது வரலாற்று்ச் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்றார் வசீம் அக்ரம்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா செல்ல இந்திய அணி திட்டமிட்டுள்ளது. ஆனால் இது இன்னும் உறுதியாகவில்லை. அதற்குப் பதில் பாகிஸ்தானை வரவழைத்து டெஸ்ட் போட்டியை நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதன் அடிப்படையில்தான் அக்ரம் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி விரும்பினாலும் அரசியல் சிலவேளை தடைக்கல்லாக அமையலாம்.
![svTENDULKAR-420x0[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/svtendulkar-420x01.jpg?w=150&h=108)
![25Wasim[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/25wasim1.jpg?w=400&h=257)
![svTENDULKAR-420x0[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/svtendulkar-420x01.jpg?w=420&h=305)
Leave a comment