சகல தேர்தல்களையும் ஜனநாயகத்துடனே நடத்துகிறோம்: எதிர்க்கட்சி தோல்வியடைவதற்கு நாம் பொறுப்பல்ல! – ஜனாதிபதி

mahindaபூண்டுலோயா: தேர்தல்களை நாம் ஜனநாயக ரீதியிலே நடத்தி வருகிறோம். எதிர்க் கட்சியால் தேர்தல்களில் வெற்றிபெற முடியாமைக்கு நாம் பொறுப்பல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனநாயகம் பற்றிப் பேசும் ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை வட மாகாணத்தில் மூன்று அல்லது நான்காவது இடத்துக்காவது வருமா என்பதும் சந்தேகமே என குறிப்பிட்ட ஜனாதிபதி மக்களுக்கு சேவை செய்வோரையே மக்கள் ஆதரிப்பர் என தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்றைய தினம் பூண்டுலோயா ‘சமதி’ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி தொடர்ந்தும் தெரிவித்ததாவது, அரசாங்கம் கல்வித்துறையில் பாரிய அபிவிருத்தியை மேற்கொண்டுள்ளது. ஒரு இலட்சத் துக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுக் கொடுத் துள்ளதுடன் எதிர்காலத்தில் பல்கலைக் கழகத்திலிருந்து வெளிவரும் பட்ட தாரிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்கக் கூடிய வேலைத் திட்டமொன்று நடை முறைப்படுத்தப்படும்.

மத்திய மாகாணமெங்கும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கூடும் மக்கள் எண்ணிக்கையை பார்த்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறுவது உறுதியாகிறது. நாட்டில் ஜனநாயகம் இல்லையென சிலர் பிரசாரம் செய்கின்றனர். இன்னும் சிலர் இந்த நாட்டிலிருந்து ஜனநாயகம் தூரமாகிவிட்டது என்கின்றனர். மக்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லாதவர்களே இது போன்று எதையாவது சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

வடக்கில் தேர்தலை நடத்தினோம். வடக்கு மக்களுக்கும் அதன் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தோம். அரசாங்கம் மக்களுக்கு சேவை செல்வதால் மக்கள் அரசாங்கத்துடன் உள்ளனர். நாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தோம். பயம் அச்சமின்றி வாழ் வதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.

அம்பாந்தோட்டையிலிருந்து அக்காலத்தில் நான் காரில் வரும்போது கொழும்பை நெருங்கும்போது தான் பாதையைக் காண முடிந்தது. இப்போது நுவரெலியா போன்ற மாவட்டங்களில் ஒன்றோ இரண்டோ பாதைகள் மட்டுமே ‘காபட்’ போடவேண்டியுள்ளது. அதனையும் விரைவில் நாம் நடைமுறைப்படுத்துவோம். கொத்மலை பிரதேசத்திற்கு சிறப்பான வரலாறு உள்ளது. இதனை தெற்கோடு இணைத்துப் பேசுவதுமுண்டு. இங்கு துட்டகைமுனு அரசன் வந்து வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

அதேபோன்று ஏனைய பகுதிகளைப் போல தோட்டங்களும் கிராமங்களும் பிரிந்திருக்காமல் இப்பகுதிகளில் இரண்டும் இணைந்திருக்கின்றமை சிறப்பம்சமாகும். இது நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் உறுதுணையாகிறது. இப்பிரதேசத்திலுள்ள இளைஞர்கள் தோட்டங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பது எமது விருப்பமல்ல. அவர்கள் உயர் கல்விகற்று வாழ்க்கையில் உயர்வதையே நாம் விரும்புகிறோம். நாடு சுதந்திரமடைந்த சுமார் 60 ஆண்டுகள் தொடர்ந்த பிரச்சினைகளுக்கு நாம் சிறந்த தீர்வினைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தால் ‘டயர்’ மூலமே பதிலளிக்கப்பட்டது. இப்பகுதியிலும் பெருமளவு இளைஞர்களுக்கு அந்த கதியே நேர்ந்துள்ளது.

அந்த யுகத்தை நாம் மாற்றியுள்ளோம். இன்று இளைஞர்கள் எம்முடன் பேசவும் வாதிடவும் தர்க்கம் பண்ணவும் கூட நாம் சுதந்திரம் வழங்கியுள்ளோம். அதற்கான ஜனநாயக உரிமையை நாம் பாதுகாத்துள்ளோம். முதலமைச்சரை நியமிப்பது தொடர்பில் மக்களது எதிர்பார்ப்பு அதிகமாயுள்ளது. எனினும் மக்களின் விருப்பு வாக்குகளே அதனைத் தீர்மானிக்கும். அபிவிருத்தியை கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதில் வெற்றிபெற்றுள்ளோம். எமது நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடரும் என்றார்.

இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி தோட்டப் பகுதி மக்களும் இந்த நாட்டின் உயிர் நாடியே. அதனை எவரும் மறுக்க முடியாது. தோட்ட மக்கள் தொடர்ந்தும் இதுபோன்றில்லாமல் வாழ்க்கையில் முன்னேறுவது அவசியமாகும். அவர்கள். அனைத்து வசதிகளையும் மென்மேலும் பெறவேண்டும். உங்கள் பிள்ளைகளும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளையும் கற்று உயர்வடைய வேண்டும். நாம் தோட்டப்புறங்களுக்குப் பெருமளவு ஆசிரிய நியமனங்களை வழங்கியுள்ளோம்.

இங்கு புதிய பட்டதாரிகள் இன்னுமின்னும் உருவாக வேண்டும். பிள்ளைகளே உங்களதும் எங்களதும் நாட்டினதும் செல்வங்கள்.நாம் தோட்ட மக்களுக்கு வீடு, மின்சாரம், பாதைகள், சுகாதாரம், கல்வி என சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். லயன் காம்பிரா யுகத்துக்கும் முடிவு கட்டவுள்ளோம். இந்த நாட்டில் அனைத்து மக்களும் சம உரிமையுடன் கெளரவத்தோடு வாழவேண்டும். ஒரே நாடு, ஒரே மக்கள், சமமான வசதிகள், அதுவே எமது நோக்கம் எனவும் ஜனாதிபதி தமி ழில் தெரிவித்தார்.

– தினகரன்

Published by

Leave a comment