கொழும்பு: இந்த வருடத்திற்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஹாஜிகளை ஏற்றிய முதலாவது பயணிகள் விமானம் இன்று வெள்ளிக்கிழமை (13) இலங்கையில் இருந்து புனித மக்கா நோக்கி பயணமாகவுள்ளது. இலங்கை ஹாஜிகள் 2240 பேருக்கு இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 75 ஹாஜிகளை உள்ளடக்கிய முதலாவது குழு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியா நோக்கி செல்லவிருப்பதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம். எச். எம். ஸமீல் தெரிவித்தார்.
முதலாவது தொகுதியினரை வழியனுப்பி வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 1.00 மணிக்கு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமரும் புத்தசாசன மத விவகார அமைச்சருமான டி. எம். ஜயரத்ன தலைமையில் இடம்பெறவிருப் பதுடன் நிகழ்வில் பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கடந்த காலங்களைப் போல் இவ்வருடமும் இலங்கை ஹாஜிகளின் நலன் கருதி புனித ஹஜ் காலத்தில் மக்கா மினா, அறபா மற்றும் மதீனா போன்ற இடங்களில் இலவசமாக மருத்துவ சேவையும் வழங்கப்படும். இதற்காக திணைக்களம் ஒரு தொகுதி மருந்துப் பொருட்களையும் இப்பணியில் சுமார் நான்கு வைத்தியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினரையும் ஹாஜிகளுடன் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
இன்று 13 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை இலங்கையில் இருந்து ஹாஜிகளை ஏற்றிய விமானங்கள் சவூதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
– தினகரன்
Leave a comment