கொழும்பு: சாதி, மத பூசல்களை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு இன, மத பூசல்களுக்கு நாம் தூபமிடலாகாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஜனாதிபதி செயலகத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும், தமிழ் இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்த போது தெரிவித்தார்.
ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் பெளத்த வெறியர்கள் முஸ்லிம் பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்து அப்பெண்களை மானபங்கப்படுத்தியுள்ளனர் என்று ஆதாரமற்ற பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இத்தகைய செய்திகள் உள்ளூரில் வெளிவந்தால் நாட்டில் பெரும் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை ஊடகவியலாளர்கள் உணர்ந்து மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
இன்னுமொரு செய்தி குறித்த தகவல் தனக்கு எட்டியிருப்பதாகவும் அதில் 6 வயது சிறுமியை வயது முதிர்ந்த முஸ்லிம் ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என்றும் இன்னுமொரு சம்பவத்தில் வயது குறைந்த பிக்கு ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெறுவதாகவும் எனக்கு தெரியவந்தது. இப்படியான செய்திகள் ஊடகங்களில் வெளிவரக்கூடாது. இதனால், மக்களிடையே பகைமை உணர்வும், வன்முறைகளும் தூண்டப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். ஊடகங்களுக்கு இத்தகைய செய்திகள் கிடைக்கும் போது அந்த செய்திகளினால் சமூகத்திற்கு ஏற்படும் தாக்கங்களை நன்கு ஆராய்ந்த பின்னர் ஊடகங்கள் சுயதணிக்கைகளை செய்து செய்திகளை வெளியிடுவது அவசியமென்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசார மேடைகளில் சிலர் மக்களின் ஆர்வத்தை தூண்டிவிடுவதற்காக பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அவர் உரிய வேளையில் வந்து தமிழ் மக்களை காப்பாற்றுவார் என்று வீராவேசத்துடன் பேசுவார்கள். அவர்களின் பேச்சைக்கேட்கும் மக்களும் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்.
இதைப்பற்றி நாம் பொருட்படுத்தக் கூடாது. தேர்தல்களின் போது இப்படிதான் பலரும் பேசுவார்கள்.
ஆனால், இத்தகைய வீராவேசத்தைத் தூண்டும் உரைகள் நிகழ்த்தப்படும் மேடைகளில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் மெளனமாக அமர்ந்து இருந்ததை பார்க்கும் போது அவரும் இந்த கருத்துக்களை ஆதரிக்கிறாரா என்ற உணர்வு மக்கள் மனதில் ஏற்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டினார்.
உலகில் எந்தவொரு நாட்டிலும் நாம் ஏற்படுத்தியது போன்ற அபிவிருத்திப் பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டிருக்க முடியாது. அந்தளவுக்கு நாம் வடபகுதியை அபிவிருத்தி செய்துள்ளோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, இன்று யாழ்ப்பாணத்தில் விலைகள் மிகவும் குறைந்திருக்கிறது. இந்திய சேலைகள் குறைந்த விலைக்கு யாழ்ப்பாணத்தில் விற்கப்படுவதனால் பெண்கள் யாழ்ப்பாணத்திற்கு படை எடுக்கிறார்கள் என்றும் கூறினார்.
நான் இம்மாதம் 17ம் திகதியன்று கிளிநொச்சிக்கு ரயில் மூலம் பயணிக்க இருக்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.
– தினகரன்
Leave a comment